அவதேஷ் பிரசாத்தை அயோத்தியின் ராஜா என்பதா? - சனாதனத்தை அகிலேஷ் அவமதித்துவிட்டதாக பாஜக புகார்

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத்தை அயோத்தியின் ராஜாஎன சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் குறிப்பிட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராமருக்கு இணையாக அவரை குறிப்பிட்டு சனாதனத்தை அகிலேஷ் அவமதித்துள்ளதாக பாஜக புகார் கூறியுள்ளது.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களிடம் பேசும்போது, தனது கட்சியின் பைசாபாத் எம்.பி. அவதேஷ் பிரசாத்தை அயோத்தியின் ராஜா என குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளர் ஷெஹசாத் புனேவாலா கூறும்போது, “அயோத்தியின் ராஜா என தனது எம்.பி. அவதேஷ் பிரசாத்தை குறிப்பிட்டு சனாதனத்தை அகிலேஷ் அவமதித்து விட்டார். அயோத்தியின் ராஜா யார் என்பது அனைவருக்கும் தெரியும். அவருக்கு இணையாக அங்கு எவரும் இருக்க முடியாது. உ.பி.யில் 37 எம்.பி.க்களை பெற்ற பிறகு அகிலேஷுக்கு அரக்கத்தனம் வந்துவிட்டது. தனது எம்.பி.க்களில் ஒருவரை ராமருக்கு இணையாக அகிலேஷ் பேசியது மாபெரும் தவறு. சனாதனத்துக்கு பிறகு இந்து மதத்தையும், ராமரையும் கூட எதிர்க்கட்சிகள் இழிவுபடுத்தத் தொடங்கி விட்டன” என்றார்.

அயோத்தி ராமர் கோயில் விவகாரம் சுமார் 500 ஆண்டுகளாக தொடர்ந்தது. உச்ச நீதிமன்ற வழக்கால் ஏற்பட்ட முடிவுக்கு பிறகுஅங்கு ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதையெட்டி, பாஜகவின் மத்திய, மாநில அரசுகள் அயோத்திக்கு ரூ.1,800 கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்து நிறைவேற்றி வருகின்றன. இதன் பிறகும் அங்கு பாஜக வேட்பாளர் லல்லுசிங் தோல்வியுற்றார். இவருக்கு எதிராக போட்டியிட்ட சமாஜ்வாதியின் தலித் வேட்பாளர் அவதேஷ் பிரசாத் வெற்றி பெற்றார். இதனை சமாஜ்வாதி சாதனையாகக் கருதுகிறது.

இந்த விவகாரத்தில் உ.பி. பாஜகவினரும் அகிலேஷுக்கு எதிராக போராட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதற்கு உ.பி.யில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெற இருப்பது காரணமாக கூறப்படுகிறது. உ.பி.யில் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் பாஜக மற்றும் இண்டியா கூட்டணி இடையே கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE