அரசு எந்த முடிவு எடுத்தாலும், 3 அம்சங்களைக் கருத்தில் கொள்ளவேண்டும். நோக்கம், பயனாளர், செயல்திறன். மத்திய அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு, கட்டாயம் ஆகிறது. காலை 9:15-க்குள் வரத் தவறினால், அரை நாள் தற்செயல் விடுப்பாகக் கொள்ளப்படும்
முன்னர் குறிப்பிட்டதில் 2 அம்சங்கள் - நோக்கம், பயனாளர் - தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இதனை முறையாக முழுமையாகச் செயல்படுத்த சாத்தியக் கூறுகள்..? பயோமெட்ரிக் வருகைப் பதிவு முழுப் பயன் தர வேண்டும் எனில், உள்வாயில் வெளிவாயில் இரண்டும் பயோமெட்ரிக் கட்டுப்பாட்டுக்குள் வர வேண்டும்.
அதாவது, பயோமெட்ரிக் அனுமதி இல்லாமல் யாரும் வெளியில் செல்ல முடியாது என்பது உறுதி செய்யப்பட வேண்டும். இன்றைய நிலையில் அப்படிஇல்லை. இருக்கவும் முடியாது. பொதுமக்கள் பெருமளவில் வந்து செல்கிற அரசு அலுவலகங்களில் ஒரே நுழைவாயில், வெளிவாயில் இருக்க முடியாது; இருத்தல் கூடாது. மேலும்? ‘அனுமதி’ இன்றி யாரும் உள்ளே வரக்கூடாது என்கிற கட்டுப்பாடு, அரசு அலுவலகங்களுக்குப் பொருந்தாது; கூடாது.
எல்லாக் கதவுகளும் திறந்தே இருக்கவேண்டும்; யாரையும் யாரும் எளிதில் எப்போதும் அணுக முடியும் என்கிற நிலை வேண்டும் என்பதே அரசு அலுவலகங்களில் ஆரோக்கியமான சூழலைஏற்படுத்தும்; வெளிப்படைத் தன்மையைஉறுதி செய்யும்; பெருமளவில் முறைகேடுகளைத் தடுக்கும். பயோமெட்ரிக் முறை சாமானியர்களுக்குத் தடையாக, தயக்கம் ஏற்படுத்துவதாகவே உள்ளது.ஒருவேளை, அலுவலர்கள், பணியாளர்களுக்கு மட்டுமே பயோமெட்ரிக் பதிவு; மற்றவர்களுக்கு இல்லையோ..? தெளிவாகத் தெரியவில்லை.
இனி... ‘செல்கை’. பயோமெட்ரிக் வருகைப் பதிவேட்டில் உள்ள பெரிய குறை - பல அலுவலகங்களில், பயோமெட்ரிக் அனுமதியுடன் மட்டுமே அலுவலகத்தை விட்டு வெளியில் செல்ல முடியும் என்கிற கட்டாயம் இல்லை. இதனால் என்ன ஆகிறது..? ‘அந்தப் பக்கமா’ போகிற போது அப்படியே, பயோமெட்ரிக் முறையில் வருகையைப் பதிவு செய்து விட்டு ‘போய்க்கிட்டே’ இருக்கலாம். மீண்டும் மாலையில் வந்து ‘முறைப்படி’, வெளியேறும் நேரத்தைப் பதிவு செய்யலாம்! இந்தக் குறையை நிவர்த்திக்காமல், வருகைப் பதிவேட்டை வலியுறுத்துதல் அர்த்தமற்றது. ‘தாமதமாக வந்தால் அரை நாள் தற்செயல்விடுப்பு’ முறையைக் கண்காணிப்பவர்யார்..? அவரே தினசரி வருகையைக்கண்காணித்து நடவடிக்கை எடுக்கலாமே..! மாற்றம் கூடாது என்பதல்ல;அதன் விளைவும் முழுப் பயனும் முறைப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்பதே கேள்வி.
அடுத்து, வருகைப் பதிவேட்டுக்கு ‘அப்பால் உள்ள’ அம்சங்கள் பரிசீலிக்கப்பட வேண்டாமா?
அலுவல் நேரத்துக்குப் பிறகும், விடுமுறை நாட்களிலும் கூடப் பலரும்பணியாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறதே... இதுவெல்லாம் பயோமெட்ரிக் பதிவேட்டுக்குத் தெரியுமா..? அரசுத் துறைகள் மென்மேலும் கணினிமயமாகி ‘ஆன்லைன்’ செயல்முறைகள் விரிவடைந்து, ‘பணி நேரம்’ என்கிற வரைமுறையே இல்லாமல் போய்விட்ட காலத்தில், ‘வருகைப் பதிவேடு’ என்கிற கருத்துரு, வழக்கொழிந்து போய்விடவில்லையா..? அரசுத் துறைகள் பலவற்றில் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் (மாநில அரசுத் துறைகளில் மிகவும் மோசம்) ஒருவரே பல பணிகளை மேற்கொள்ள வேண்டிய சூழல். அநேகமாக ஒவ்வோர் அரசு அலுவலர் / பணியாளருக்கும் பணிச் சுமை, பணி அழுத்தம், பணி நெருக்கடி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற போது, ‘வருகை நேரம்’ ஏற்புடையதா..? இப்படி இன்னும் பல கேள்விகள்...
ஆனாலும், மத்திய அரசின் பணியாளர் துறை வெளியிட்டு இருக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவு அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதே. ஐயமில்லை. காரணம் இதன் நோக்கம் சிறப்பானது; பொதுமக்களுக்குச் சேவை செய்வதில் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் மெத்தனமாக இருத்தல் கூடாது என்பதே இதன் உட்செய்தி. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு காலம் தொடங்கி இன்று வரை, அரசு அலுவலகங்களில் அலுவலர் / பணியாளர் வருகை, அவர்களின் சேவைத் தரம் குறித்து இன்னமும் பேசப்படுகிறது; நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. இப்படித்தான் இருக்கும். காரணம், இது ஒரு தொடர் வினை. இதன் ஒரு பகுதியாக, அடுத்தகட்டமாக, அரசுத் துறைகளில் அலுவலர்கள், பணியாளர்களின் காலம் தவறாமையை பயோமெட்ரிக் முறை உறுதிசெய்ய உதவுமாயின் மிகவும் நல்லதுதானே..? கூடவே, இதில் உள்ள குறைகளை நீக்கி, முறையாக செயல்படுத் துவதற்கான நடவடிக்கைகளும் விரைந்து எடுக்கப்பட்டு, சாமானியர்களுக்குத் தாமதம் இன்றி சேவை கிடைக்குமாயின், அதைவிட வேறென்ன வேண்டும்..?
முக்கிய செய்திகள்
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
15 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago