கேஜ்ரிவால் விடுதலைக்கு எதிராக முழு அமைப்பும் முயல்வது சர்வாதிகாரம்: சுனிதா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வராமல் இருக்க மத்திய அரசின் அனைத்து அமைப்புகளும் முயல்வதாகவும், இது சர்வாதிகாரப் போக்கு எனவும் அவரது மனைவி சுனிதா கேஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “ஜூன் 20-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தது. ஆனால், அமலாக்கத் துறை உடனடியாக அதற்கு ஒரு தடையைப் பெற்றது. அடுத்த நாளே சிபிஐ அவரை குற்றவாளியாக்கி, இன்று கைது செய்துவிட்டது. கேஜ்ரிவால் சிறையிலிருந்து வெளியே வராமல் இருக்க முழு அமைப்பும் முயல்கிறது. இது சட்டம் அல்ல. இது சர்வாதிகாரம். இது அவசரநிலை" என தெரிவித்துள்ளார்.

வழக்கின் பின்னணி: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் அரவிந்த் கேஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்த வழக்கில் ஜாமீன் கோரி கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை விசாரித்த விசாரணை நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதையடுத்து, திகார் சிறையில் இருந்து கேஜ்ரிவால் வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி அமலாக்கத்துறை மறுநாளே (ஜூன் 21) டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவசரமனு தாக்கல் செய்தது.

மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின், விசாரணை நீதிமன்ற உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைத்து உத்தரவிட்டார். மேலும், வழக்கை ஓரிரு நாட்களில் முழுமையாக விசாரித்து இறுதி தீர்ப்பு அளிப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார். இதனால், கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவது தடைபட்டது.

இதனையடுத்து, ஜாமீன் உத்தரவை நிறுத்தி வைத்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு ஜூன் 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு, டெல்லி உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு வந்த பிறகு இந்த வழக்கை விசாரிப்பதாகத் தெரிவித்தது. வழக்கு விசாரணையை 26-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதனிடையே, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தனது இறுதித் தீர்ப்பை நேற்று (ஜூன் 25) வழங்கினார். அவர் தனது தீர்ப்பில், “அமலாக்க இயக்குநரகம் சமர்ப்பித்த பதிவில் உள்ள உள்ளடக்கத்தை விசாரணை நீதிமன்றம் சரியான முறையில் கவனிக்கவில்லை. இந்த வழக்கில் வாதிட போதுமான வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜுவின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கிறது. கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடை விதிக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்நிலையில், கேஜ்ரிவால் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, டெல்லி உயர் நீதிமன்றத்தின் தற்காலிக தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெற அனுமதி கோரினார். மேலும், டெல்லி உயர் நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பை எதிர்த்து புதிய மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், முந்தைய மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

15 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

26 mins ago

தமிழகம்

31 mins ago

இந்தியா

51 mins ago

இந்தியா

58 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

37 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்