புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய ஜாமீனுக்கு தடை விதித்த டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதிகள் மனோஜ் மிஸ்ரா, எஸ்விஎன் பாட்டி ஆகியோர் அடங்கிய விடுமுறை கால அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. கேஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த அமலாக்க இயக்குநரகம் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை நிறுத்திவைத்துள்ள டெல்லி உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் இன்னும் ஓரிரு நாட்களில் உத்தரவு அளிக்க உள்ளதாகத் தெரிவித்தார்.
இதையடுத்து, "டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவு வரட்டும். அதுவரை காத்திருப்போம்" என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதற்கு, கேஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, “அமலாக்க இயக்குநரகத்தின் மனு மீது உயர் நீதிமன்றம் முடிவெடுக்கும் வரை டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் ஏன் சுதந்திரமாக இருக்கக் கூடாது?" என வாதிட்டார். முதல்வருக்கு சாதகமாக ஜாமீன் உத்தரவு உள்ளது என்றும், அவர் ஒன்றும் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடப் போவதில்லை என்றும் கூறினார்.
» “மோடி அரசு அரசியல் சாசனத்தை மீறிவிட்டது” - எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குற்றச்சாட்டு
» கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய விவகாரம்: திமுக, காங்கிரஸுக்கு பாஜக எம்.பி கேள்வி
இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், “இந்த மனு மீது இப்போது தீர்ப்பு வழங்கினால் அது முன்கூட்டியே தீர்ப்பு வழங்கப்பட்டதாக இருக்கும். ஜாமீனை நிறுத்திவைத்திருப்பது துணை நீதிமன்றம் அல்ல, உயர் நீதிமன்றம்" என்று தெரிவித்தனர். எனவே, இந்த வழக்கின் விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
வழக்கின் பின்னணி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கேஜ்ரிவால், ஜாமீன் கேட்டு விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீது ஜூன் 20-ம் தேதி உத்தரவு பிறப்பித்த விசாரணை நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கியது.
இந்த உத்தரவை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் (ED) சார்பில் ஜூன் 21-ம் தேதி அவசர மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சுதிர் குமார் ஜெயின் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி. ராஜு, “விசாரணை நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தவறானது. முழுமையான வாதத்தை முன்வைக்க எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை. எழுத்துபூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய எனக்கு 2-3 நாட்கள் நேரம் வழங்கப்படவில்லை. விசாரணை நீதிமன்றம் அரை மணி நேரத்தில் தீர்ப்பை வழங்க விரும்புவதாக கூறியது. வழக்கை வாதிடுவதற்கு எங்களுக்கு முழு வாய்ப்பை வழங்கவில்லை. இந்தக் குற்றச்சாட்டை மிகவும் கவனமாக முன்வைக்கிறேன். எனவே, ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
கேஜ்ரிவால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் சிங்வி மற்றும் விக்ரம் சவுத்ரி ஆகியோர், அமலாக்கத் துறை வழக்கறிஞர் கூறிய குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், அவர்களின் வாதம் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறினர். தேர்தல் பிரச்சாரத்துக்காக கேஜ்ரிவாலை உச்ச நீதிமன்றம் விடுவித்ததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி, முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய விசாரணை நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்திவைப்பதாக உத்தரவிட்டார். அதேநேரத்தில், இந்த வழக்கு இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அதன் முடிவில் இறுதி தீர்ப்பு அளிக்கப்படும் என்றும் நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
17 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago