போட்டி தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை, ரூ.1 கோடி அபராதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடுதல், வினாத்தாளை கசியவிடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ரூ.1 கோடி அபராதம், 10 ஆண்டு சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்யும் சட்டத்தை மத்தியஅரசு அமலுக்குக் கொண்டு வந்துள்ளது.

சமீபத்தில் நடந்த நீட் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்தது மாணவர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதேபோல் அண்மையில் நடைபெற்ற நெட் தேர்விலும் வினாத்தாள் கசிந்து முறைகேடு நடைபெற்றதாகத் தெரியவந்தது. இதையடுத்து அந்தத் தேர்வை மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.

இந்நிலையில் மத்திய அரசு நடத்தும் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.1 கோடி அபராதமும் விதிக்கும் புதிய சட்டத்தை மத்தியஅரசு அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

இது தொடர்பாக மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிவிக்கை விவரம்: பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகளைத் தடுத்தல்) சட்டம், 2024-ன் பிரிவு 1ன் துணைப் பிரிவு (2)-ன் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, இந்த சட்டம் அமலுக்கு வரும் தேதியை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதன்படி, இந்த சட்டம் 2024, ஜூன் 21-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.

இந்த சட்டத்தின் கீழ் எத்தகைய செயல்கள் சட்டப்படி குற்றம் என்பதையும், அவற்றுக்கான தண்டனை விவரங்களையும் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) வெளியிட்டுள்ளது. அதன்படி, "வினாத்தாளை கசியவிடுதல், பதில்களை வெளியிடுதல், பொதுத் தேர்வின்போது விண்ணப்பதாரருக்கு உதவுதல், கணினி வலையமைப்பை சேதப்படுத்துதல் போன்றவை இச்சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்கள். இந்த குற்றச் செயலில் தனி நபரோ, குழுவோ, அல்லது நிறுவனமோ ஈடுபட்டால் அவர்கள் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவை தவிர, ஏமாற்றுவதற்கு அல்லது பண ஆதாயத்துக்காக போலி இணையதளத்தை உருவாக்குதல், போலி தேர்வு நடத்துதல்,போலி அனுமதி அட்டைகளை வழங்குதல், தேர்வர்களுக்கான தேர்வு தேதிகள் மற்றும் ஷிப்ட்களை ஒதுக்கீடு செய்வதில் முறைகேட்டில் ஈடுபடுதல் ஆகியவை இந்த சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களில் அடங்கும்.

இந்த சட்டத்தின் கீழ் நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். குறைந்தபட்சம் ரூ.1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.

தனிநபரோ அல்லது குழுவோ அல்லது தேர்வு நடத்தும் அதிகாரிகளோ, நிறுவனங்களோ இத்தகைய குற்றங்களைச் செய்தால் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும். மேலும், ரூ.1 கோடிக்கும் குறையாத அளவில் அபராதமும் விதிக்கப்படும்.

வினாத்தாள் கசிவு மற்றும் விடைத்தாளை சேதப்படுத்துபவர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச தண்டனை 3 ஆண்டில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் நபர்கள் ஜாமீனில் வெளியே வர முடியாது. வாரண்ட் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்ய முடியும். தவறு நடந்தது அறிந்தும், அது பற்றி புகார் அளிக்காத தேர்வை நடத்துபவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படும்.

மேலும், தேர்வு நடத்தும் அமைப்புகளில் (என்டிஏ போன்ற அமைப்புகள்) இருக்கும் மூத்த அதிகாரிகளுக்கு தெரிந்தே தவறு செய்பவர்களுக்கு 3 முதல் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும். அதனுடன், அவர்களுக்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்கப்படலாம். தேர்வு முறைகேடுகளில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் தேர்வு நடத்துபவர்களுக்கு 5 முதல் 10 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.1 கோடி அபராதமும் விதிக்கப்படலாம். மேலும், நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்து பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு மத்திய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை தனது அறிக்கையில் தெரிவித்து உள்ளது.

நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை: அமைச்சர் விளக்கம் - நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தும் தேர்வு ஏன் ரத்து செய்யப்படவில்லை என்பதற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: நீட் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது ஒரு நிர்வாக தோல்வியாகும். நீட் தேர்வை த்தும் தேசிய தேர்வு முகமையின் (என்டிஏ) செயல்பாட்டை ஆய்வு செய்ய உயர்மட்ட குழுவை அரசு அமைக்கும். அமைக்கும். அதேநேரம் இந்த வினாத்தாள் கசிவு பெரியளவில் இல்லை என்பதால் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சில தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் மட்டுமே முறைகேடு நடந்தது. இதனால் நீட் தேர்வை ரத்து செய்தால் முறையாகத் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப் படும். அது நியாயமற்றது.

நாங்கள் பிஹார் காவல் துறையுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம். வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம். இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சியினர் அரசியல் செய்ய முயல்கின்றனர். மாணவர்களின் எதிர்காலத் துடன் விளையாட வேண்டாம். குற்றவாளிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்: நீட், நெட் தேர்வுகளில் முறைகேடு புகார்கள் தொடர்பாக தேசிய தேர்வு முகமை (என்டிஏ) தலைவர் சுபோத் குமார் நேற்று இரவு நீக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக உள்ள பிரதீப் சிங் கரோலா, தேசிய தேர்வு முகமையின் தலைவர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், என்டிஏ நடத்தும் போட்டித் தேர்வுகள் வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடப்பதை உறுதி செய்ய முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.ராதாகிருஷ்ணன் தலைமையில்7 பேர் கொண்ட உயர்மட்ட நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்