‘‘வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதி’’ - ஷேக் ஹசீனா முன்னிலையில் பிரதமர் மோடி அறிவிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: வங்கதேச மக்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை தொடங்கவும், அந்நாட்டின் ரங்பூரில் புதிய தூதரகத்தை திறக்கவும் இந்தியா முடிவு செய்துள்ளது.

இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இதில், இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பின்னர் இரு தலைவர்களும் செய்தியாளர்களைக் கூட்டாகச் சந்தித்தனர். அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை, இந்தியாவின் கிழக்கு நாடுகளுக்கான செயல் கொள்கை, விஷன் சாகர், இந்தோ - பசிபிக் தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றின் சங்கமத்தில் வங்கதேசம் அமைந்துள்ளது. கடந்த ஓராண்டில், மக்கள் நலன் சார்ந்த பல முக்கிய திட்டங்களை நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து நிறைவேற்றியுள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் தொடங்கியுள்ளது.

இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையே கங்கை நதியில் உலகின் மிக நீளமான ஆற்றுப் பயணத்துக்கான திட்டம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் இடையிலான முதல் எல்லை தாண்டிய நட்புறவு குழாய்த் திட்டம் நிறைவடைந்துள்ளது. நேபாளத்தில் இருந்து வங்கதேசத்துக்கு இந்திய கிரிட் மூலம் மின்சாரம் ஏற்றுமதி செய்வது என்பது, எரிசக்தி துறையில் பிராந்திய ஒத்துழைப்பின் மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வளவு பெரிய முயற்சியை ஒரே வருடத்தில் பல பகுதிகளில் செயல்படுத்துவது இரு நாட்டு உறவுகளின் வேகத்தையும் அளவையும் பிரதிபலிக்கிறது.

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக வருபவர்களுக்கு இ-மெடிக்கல் விசா வசதியை இந்தியா தொடங்கவுள்ளது. வங்கதேசத்தின் வடமேற்குப் பகுதி மக்களின் வசதிக்காக ரங்பூரில் புதிய துணை தூதரகத்தை திறப்பதற்கு நாங்கள் முன்முயற்சி எடுத்துள்ளோம். வங்கதேசம் இந்தியாவின் மிகப் பெரிய வளர்ச்சி பங்காளியாகும். வங்கதேசத்துடனான உறவுகளுக்கு நாம் அதிக முன்னுரிமை அளிக்கிறோம். இணைப்பு, வர்த்தகம் மற்றும் ஒத்துழைப்பு ஆகியவை இரு நாடுகளின் மையமாக உள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில், 1965-க்கு முன்பு இருந்த இணைப்பை மீட்டெடுத்துள்ளோம். இப்போது டிஜிட்டல் மற்றும் எரிசக்தி இணைப்பில் இன்னும் அதிக கவனம் செலுத்துவோம். இது இரு நாடுகளின் பொருளாதாரத்தை விரைவுபடுத்தும். 1996 கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பித்தல் தொடர்பான தொழில்நுட்ப அளவிலான பேச்சுவார்த்தைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம். வங்கதேசத்தில் உள்ள தீஸ்தா நதியின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மைக்காக, தொழில்நுட்பக் குழு விரைவில் அந்நாட்டுக்குச் செல்ல உள்ளது.

நமது பாதுகாப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த, பாதுகாப்பு உற்பத்தி முதல் ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல் வரை விரிவான விவாதங்களை நடத்தினோம். பயங்கரவாத எதிர்ப்பு, அடிப்படைவாதம் மற்றும் எல்லையை அமைதியான முறையில் நிர்வகிப்பது ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே டி20 உலகக் கோப்பை 2024 போட்டி இன்று நடைபெற உள்ளது. இரு அணிகளுக்கும் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்