நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக ஜூன் 21-ல் காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நீட் எனப்படும் இளங்கலை மருத்துவப் பட்டப் படிப்புக்கான நுழைவுத் தேர்வில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து வரும் 21-ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் அனைத்து மாநில தலைவர்கள், சட்டப்பேரவைக் குழு தலைவர்கள், அகில இந்திய பொதுச் செயலாளர்கள், பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது: "நீட் தேர்வு நடத்தப்பட்டது குறித்தும் தேர்வு முடிவுகள் குறித்தம் ஏராளமான புகார்கள் எழுந்துள்ளன. இந்த புகார்களுக்குத் தீர்வு காண நாம் முனைய வேண்டும். நீட் தேர்வின் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியானதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். முறைகேடுகள், வினாத்தாள் கசிவு, சில மாணவர்களுக்கு அதிக மதிப்பெண் போடப்பட்டது என இதில் பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

வெளிப்படையாக அறிவிக்காமல் கூடுதல் மதிப்பெண் வழங்கியது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தி இருக்கிறது. தொழில்நுட்ப குறைபாடுகள், முறைகேடுகள், சில தேர்வு மையங்களில் மோசடிகள் ஆகியவை நடந்துள்ளன. இது தொடர்பாக பாஜக ஆளும் பிஹார், குஜராத், ஹரியானா மாநிலங்களில் நடந்துள்ள கைதுகள், எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை வெளிப்படுத்தி உள்ளன.

மிகத் தீவிரமான குற்றச்சாட்டுக்கள் எழுந்திருக்கும் இந்த விவகாரம் குறித்து உச்ச நீதிமன்றம் கூறிய கருத்துகள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. நீட் தேர்வு விவகாரத்தில் சிறிதுகூட அலட்சியம் காட்டப்படக் கூடாது என அது வலியுறுத்தி இருக்கிறது. இதுபோன்ற முறைகேடுகள், தேர்வின் நம்பகத்தன்மையை வெகுவாக பாதிக்கின்றன. ஏராளமான மாணவர்களின் எதிர்காலத்தை பாதிப்பதாகவும் இது இருக்கிறது. வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மாணவர்களின் நலனை காக்கும் நோக்கில் கடுமையான சட்டம் இயற்றப்படும் என காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருக்கிறது.

நீட் தேர்வில் நடந்துள்ள மிகப் பெரிய ஊழல் மற்றும் முறைகேடுகளைக் கண்டித்தும், இந்த விவகாரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடைப்பிடித்து வரும் அமைதியை கண்டித்தும் மாநில தலைநகரங்களில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) அன்று மிகப் பெரிய போராட்டத்தை அனைத்து மாநில காங்கிரஸ் கமிட்டிகளும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் நீதியைப் பெற அன்றைய தினம் வலியுறுத்த வேண்டும்" என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற அறிவுரை: முன்னதாக, நீட் தேர்வு குளறுபடிகள் தொடர்பாக மாணவர்கள் தாக்கல் செய்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், எஸ்.வி.பாட்டி அடங்கிய விடுமுறைக் கால அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மற்றும் என்டிஏ சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகினர். அப்போது நீதிபதிகள் கூறியதாவது: நீட் மற்றும் பிற நுழைவுத் தேர்வுகளை நடத்துவதில் 0.001% அலட்சியத்தைக்கூட ஏற்றுக்கொள்ள முடியாது. இதை மத்திய அரசும், தேசிய தேர்வு முகமையும் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும். தவறு நடந்திருந்தால், ‘ஆம் தவறு இருக்கிறது’ என்பதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டு, ‘நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை இதுதான்’ என்பதை தைரியமாக தெரிவிக்க வேண்டும். அதுதான் குறைந்தபட்சம் உங்கள் செயல்திறனில் நம்பிக்கையை தூண்டும்.

நுழைவுத் தேர்வில் தவறு நடந்திருந்தால், அதை வெளிப்படை தன்மையுடன் ஒப்புக்கொண்டு, அதுகுறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட ஒத்துழைக்க வேண்டும். நீட் தேர்வு மீதான மாணவர்களின் குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. நீட் தேர்வர்கள், கல்வியாளர்கள் தாக்கல் செய்யும் மனுக்களை மத்திய அரசும், தேர்வு முகமையும் விரோதப் போக்குடன் பார்க்க கூடாது. இந்த சமூகத்தில் ஒருவர் மோசடி செய்து மருத்துவரானால் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதை கற்பனை செய்து பாருங்கள். அது, சமூகத்துக்கு பெரும் தீங்குகளை விளைவிக்கும்.

நீட் போன்ற பெரிய தேர்வுகளுக்கு தயாராகும் லட்சக்கணக்கான குழந்தைகளின் உழைப்பையும், நேர்மையான முயற்சிகளையும் யாரும் மறக்க கூடாது. இதுபோன்ற மோசடிகள் அவர்களது உண்மையான லட்சியங்களை முறியடித்துவிடும். என்ன தவறு நடந்துள்ளது என்பதை, நேர்மையான விசாரணை மூலமாக மட்டுமே கண்டறிய முடியும். நீட் முறைகேடு வழக்கில் மத்திய அரசு, தேசிய தேர்வு முகமை 2 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும். அதற்கான நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது.

மேலும், தேர்வை புதிதாக நடத்த உத்தரவிடக் கோரியது உட்பட நீட் தேர்வின் பல்வேறு குளறுபடிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஜூலை 8-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும். இவ்வாறு உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.

ராகுல் காந்தி குற்றச்சாட்டு: இதற்கிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், நீட் தேர்வு முறைகேடுகளால் 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆனாலும்கூட, இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி வழக்கம்போல மவுனம் சாதிக்கிறார். நீட் தேர்வு செயல்பாட்டில் திட்டமிட்ட மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட ஊழல் நடந்துள்ளது என்பதை, பிஹார், குஜராத், ஹரியாணாவில் நடந்த கைது நடவடிக்கைகள் தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. பாஜக ஆளும் மாநிலங்கள்தான் வினாத்தாள் கசிவின் மையமாக இருந்துள்ளன’ என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்