ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும்: 7 கேள்விகளுடன் காங். வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள நியூ ஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நேற்று இரண்டு ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். மேற்கு வங்கத்தின் கொல்கத்தா மற்றும் அசாமின் சில்சார் இடையே இயக்கப்படும் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் மீது பின்னாள் வந்த சரக்கு ரயில் மோதியதில் இந்த விபத்து நேரிட்டது. எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்னாள் வந்த சரக்கு ரயில் ஓட்டுநர், சிக்கனலை கவனிக்காததே விபத்துக்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்த விபத்துக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்திய அரசுக்கு 7 கேள்விகளை எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ரயில் விபத்து ஏற்படும் போதெல்லாம், மோடி அரசின் ரயில்வே அமைச்சர், கேமராக்களின் ஒளியில் அந்த இடத்தை அடைந்து, எல்லாம் சரியாகிவிட்டது போல் நடந்து கொள்கிறார். இந்த விபத்துக்கு பொறுப்பு, நீங்களா (நரேந்திர மோடி) அல்லது ரயில்வே அமைச்சரா?

எங்களிடம் 7 கேள்விகள் உள்ளன - இதற்கு மோடி அரசு பதிலளிக்க வேண்டும். 1. பாலாசோர் போன்ற ஒரு பெரிய விபத்துக்குப் பிறகும்கூட, ஏன் ஒரு கிலோமீட்டர் தூரம் கூட "கவாச்" எனப்படும் ரயில் மோதல் தடுப்பு அமைப்பு சேர்க்கப்படவில்லை? 2. ரயில்வேயில் ஏன் கிட்டத்தட்ட 3 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன? கடந்த 10 ஆண்டுகளில் காலி பணியிடங்கள் ஏன் நிரப்பப்படவில்லை? 3. NCRB (2022) அறிக்கையின்படி, 2017 மற்றும் 2021-க்கு இடையில் மட்டும் 1,00,000 பேர் ரயில் விபத்துகளில் இறந்துள்ளனர். இதற்கு யார் பொறுப்பேற்பார்கள்?

4. ஆள் பற்றாக்குறையால் ரயில் ஓட்டுநர்கள் (லோகோ பைலட்டுகள்) நீண்ட நேரம் வேலை செய்வதே விபத்துகள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் என்பதை ரயில்வே வாரியமே ஒப்புக் கொண்டுள்ளது. பிறகு ஏன் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை? 5. நாடாளுமன்ற நிலைக்குழு தனது 323-வது அறிக்கையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் (சிஆர்எஸ்) பரிந்துரைகளுக்கு ரயில்வே வாரியம் காட்டிய "புறக்கணிப்பு" குறித்து ரயில்வேயை விமர்சித்துள்ளது. CRS ஆனது 8%-10% விபத்துகளை மட்டுமே விசாரிக்கிறது என்பது அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. ஏன் CRS பலப்படுத்தப்படவில்லை?

6. சிஏஜியின் கூற்றுப்படி, தேசிய ரயில் பாதுகாப்பு (ஆர்ஆர்எஸ்கே) திட்டத்தில் 75% நிதி ஏன் குறைக்கப்பட்டது? இந்த நிதி குறைப்பால், ஒவ்வொரு ஆண்டும் ரூ. 20,000 கோடி கிடைக்க வேண்டும். இந்த பணத்தை ரயில்வே அதிகாரிகள் தேவையற்ற செலவுகளுக்கும், வசதி பெருக்கத்துக்கும் ஏன் பயன்படுத்துகிறார்கள்? 7. ஸ்லீப்பர் வகுப்பில் ரயிலில் பயணம் செய்வது மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பது ஏன்? ஸ்லீப்பர் கோச்-களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது ஏன்?

ரயில் பெட்டிகளில் அதிக கூட்டம் காரணமாக பயணிகளுக்கு எதிராக காவல்துறை பயன்படுத்தப்பட்டதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த ஆண்டு மட்டும் 2.70 கோடி பேர் இருக்கை கிடைக்காததால் டிக்கெட்டுகளை கேன்சல் செய்துள்ளனர். ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை குறைத்ததன் நேரடி விளைவுதான் இது. ரயில்வே பட்ஜெட்டை கடந்த 2017-18ல் பொது பட்ஜெட்டுடன் மோடி அரசு இணைத்தது. பொறுப்புக் கூறலை தவிர்க்கவே இவ்வாறு செய்யப்பட்டதா? இந்திய ரயில்வேயில் மோடி அரசு செய்துள்ள அலட்சியம் எனும் குற்றத்தை, துதிபாடல் ஒழிக்காது. பொறுப்புக்கூறல் மேல்நிலையில் சரி செய்யப்பட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்