‘சரக்கு ரயில் இயக்கத்தில் விதிமீறல்’ - மேற்கு வங்க ரயில் விபத்து ஏற்பட்டது எப்படி?

By செய்திப்பிரிவு

ஜல்பைகுரி: மேற்கு வங்க மாநிலம் நியூ ஜல்பைகுரி மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியது. இந்த ரயில் அசாமின் சில்சாரில் இருந்து மேற்கு வங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. அப்போது நியூ ஜல்பைகுரியில் விபத்து நடந்துள்ளது. பின்னால் இருந்து சரக்கு ரயில் மோதியதில் கஞ்சன்ஜங்கா ரயிலின் 3-ல் இருந்து 5 பெட்டிகள் வரை சேதமடைந்தன. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர்; 40-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்தது எப்படி? - இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, விபத்து நடந்தது எப்படி என்பது தொடர்பாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. ராணிபத்ரா மற்றும் ரங்கபாணி ரயில் நிலையங்களுக்கு இந்த விபத்து நடந்துள்ளது. முன்னதாக, அதிகாலை 5.50 மணி முதல் ராணிபத்ரா ரயில் நிலையம் மற்றும் சத்தர் ஹட் சந்திப்பு இடையேயான ஆட்டோமேட்டிக் சிக்னல் பழுதடைந்து இருந்துள்ளது. இந்த நிலையில் தான் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்தில் இருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது. ஆட்டோமேட்டிக் சிக்னல் பழுது காரணமாக சத்தர் ஹாட் இடையே இது நிறுத்தப்பட்டது.

வழக்கமாக ஆட்டோமேட்டிக் சிக்னலில் பழுது ஏற்பட்டால், ரயில் சிக்னலை கடக்க சம்பந்தப்பட்ட ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை ரயில் ஓட்டுநருக்கு அளித்த பின்பே லோகோ பைலட்டால் ரயிலை இயக்க முடியும். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயிலை பொறுத்தவரை பழுதான சிக்னலை கடக்க ராணிபத்ரா ரயில் நிலைய மேலாளர் TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை வழங்கியுள்ளார். இதனைத் தொடர்ந்தே கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் காலை 8:27 மணிக்கு ரங்கபாணி நிலையத்திலிருந்து ராணிபத்ரா ரயில் நிலையம் நோக்கி புறப்பட்டது.

அதேநேரம், சரக்கு ரயிலும் ரங்கபாணி நிலையத்தில் இருந்து காலை 8:42 மணிக்கு ராணிபத்ரா நோக்கி புறப்பட்டுள்ளது. ஆனால், சரக்கு ரயில் பழுதான சிக்னலை கடக்க TA 912 எனப்படும் எழுத்துபூர்வ அதிகாரத்தை எந்த ஸ்டேஷன் மாஸ்டரும் கொடுக்கவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சரக்கு ரயிலின் லோகோ பைலட் விதிகளை மீறி பழுதான சிக்னலை கடந்து சென்றதாக ரயில்வே கூறியுள்ளது. இதுவே, விபத்துக்கான காரணமாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுவாக பழுதான சிக்னலில், ஒரு ரயிலுக்குப் பின் செல்லும் மற்றொரு ரயில் செல்லும்போது 10 கி.மீ வேகத்திலேயே ஒவ்வொரு சிக்னலையும் கடக்க வேண்டும். ஆனால், இந்த விபத்துக்கு முன்னதாக சரக்கு ரயில் இந்த விதிமுறையை மீறியதாக சொல்லப்படுகிறது. அதுவே விபத்துக்கு காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. எனினும், முழுமையான விசாரணைக்கு பின்னரே முழு விவரம் தெரியவரும்.

உதவி எண்கள் அறிவிப்பு: விபத்து குறித்து தகவல் அறிய தொலைபேசி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 033-23508794 (பிஎஸ்என்எல்), ரயில்வே எண் 033-23833326 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம்.

முதல்வர் கவலை: இந்த விபத்து குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன். கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன” என்று பதிவிட்டுள்ளார்.

அதேபோல் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், விபத்துப் பகுதியில் போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளி மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவர் சம்பவ இடத்துக்கும் விரைந்தார்.

நிவாரண உதவி: பிரதமர் நரேந்திர மோடி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளதோடு உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரணத் தொகையும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டுள்ளார்.

விபத்து குறித்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தங்கர், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தனது இரங்கல் பதிவில், “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க் மாவட்டத்தில் நேரிட்ட ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மோடி அரசின் தவறான நிர்வாகமே காரணம்! - மேற்கு வங்க ரயில் விபத்துக்கு நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால தவறான நிர்வாகமே காரணம் என்று காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு, ரயில்வே அமைச்சகத்தை மிகவும் தவறாக நிர்வகித்து வந்துள்ளது. சுய விளம்பரத்துக்கான மேடையாக, கேமராவால் இயக்கப்படும் ஒரு துறையாக திட்டமிட்ட ரீதியில் மோடி அரசு அதனை மாற்றிவிட்டது. ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக இதனை சுட்டிக்காட்டுவது எங்கள் கடமை என்று கருதுகிறோம்.

இந்த அப்பட்டமான யதார்த்தத்தின் மற்றொரு நினைவூட்டலாகவே இன்றைய சோகச் சம்பவம் இருக்கிறது. எங்கள் மீது குற்றம் காணாதீர்கள். நாங்கள் எங்கள் கேள்விகளை தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருப்போம். மேலும், இந்திய ரயில்வேயை கைவிட்ட குற்றத்தை இழைத்த மோடி அரசை அதற்கு பொறுப்பேற்கச் செய்வோம்" என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்