மும்பை: தனியார் மருத்துவமனைக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்

By செய்திப்பிரிவு

மும்பை: மும்பை மீரா சாலையில் உள்ள வோக்கார்ட் மருத்துவமனைக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவமனை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெடிகுண்டு சோதனை நடந்து வருகிறது.

வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட செய்தி அறிந்தவுடன் மருத்துவமனை பகுதியில் மக்கள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் மருத்துவமனை வளாகம் மூடப்பட்டது. தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவு அதிகாரிகள் வெடிகுண்டு சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டை தேடும் பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

முன்னதாக, மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு மனநல மருத்துவமனைக்கு ஜூன் 12 அன்று மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. அது பின்னர் போலியானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் தலைநகர் டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகம் மற்றும் ரயில் அருங்காட்சியகம் உட்பட பல அருங்காட்சியகங்களுக்கும் ஜூன் 12 அன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் நடந்த சோதனையில் சந்தேகத்துக்கு உரிய வகையில் எந்தப் பொருளும் கிடைக்கவில்லை.

அதேபோல், கடந்த மாதம், மும்பை விமான நிலையம் மற்றும் தாஜ் ஓட்டலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இது புரளி என கண்டுபிடிக்கப்பட்டாலும், வெடிகுண்டு குறித்து போனில் பேசிய உத்தரபிரதேசத்தை சேர்ந்த அரவிந்த் ராஜ்புத் என்பவர் பின்னர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE