அருந்ததி ராய்க்கு எதிராக ‘உபா’ வழக்குப் பதிய வலுக்கும் எதிர்ப்பு: பின்னணி என்ன?

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனுக்கு எதிராக சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் (உபா - UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்ய ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும் அதிருப்தி தெரிவித்துள்ளன.

கடந்த 2010, அக்டோபர் 21-ம் தேதி டெல்லியில் உள்ள எல்டிஜி ஆடிட்டோரியத்தில் ‘விடுதலை - ஒரே வழி’ என்ற தலைப்பின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட மாநாட்டில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் பேராசிரியர் ஹுசைன் ஆகியோர் ஆத்திரமூட்டும் பேச்சுகளை பேசியதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக 2010, அக்டோபர் 28 அன்று காஷ்மீரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சுஷில் பண்டிட் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோருக்கு டெல்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தப் புகார் மீது இருவருக்கு எதிராகவும் சட்ட விரோத தடுப்பு செயல்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய டெல்லி துணைநிலை ஆளுநர் வி கே சக்சேனா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இருவர் மீதும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதற்கு ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தேசிய மாநாட்டுக் கட்சி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “உபா சட்டத்தின் கீழ் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் டாக்டர் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்திருப்பதற்கு தேசிய மாநாட்டுக் கட்சி தனது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்கிறது. கருத்து வேறுபாடுகளை அடக்குவதற்கும், பேசுவதை குற்றமாக்குவதற்கும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களைப் பயன்படுத்துவது ஆழ்ந்த கவலைக்குரியது.

அவர்கள் பேசியதாகக் கூறப்படும் நிகழ்வு நடந்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது. இடைப்பட்ட ஆண்டுகளில், அவர்கள் என்ன பேசினார்களோ அவை அனைத்தும் மறந்துவிட்டன. அவை ஜம்மு காஷ்மீரின் சூழலை பாதிக்கவில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பின்னடைவை எதிர்கொண்ட போதிலும், பாஜக / மத்திய அரசாங்கத்தின் கடுமையான நிலைப்பாடு மாறாது என்பதைக் காட்டுவதற்காக அன்றி, வேறு எந்த நோக்கத்துக்கு இந்த வழக்கு உதவாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான மெகபூபா முஃப்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரும், பாசிசத்துக்கு எதிராக சக்திவாய்ந்த குரலாக வெளிப்பட்ட துணிச்சலான பெண்மணியுமான அருந்ததி ராய் மீது கடுமையான உபா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். அதேபோல், காஷ்மீரைச் சேர்ந்த ஒரு முன்னாள் சட்டப் பேராசிரியர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பது விரக்தியின் செயல்" என்று விமர்சித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE