பிரான்ஸ் அதிபர், இங்கிலாந்து பிரதமர், உக்ரைன் அதிபர் உடன் பிரதமர் மோடி சந்திப்பு | ஜி7 உச்சி மாநாடு

By செய்திப்பிரிவு

அபுலியா (இத்தாலி): ஜி7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உள்ளிட்டோருடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை நடத்தினார்.

50வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்று வருகிறது. ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும் இந்த மாநாட்டின் உறுப்பு நாடுகளாக கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. இம்மாநாட்டை இத்தாலி நடத்துகிறது. அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா, ஜோர்டான், கென்யா, துனிஷியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், உக்ரைன், மொரிட்டானியா, வாடிகன் சிட்டி ஆகிய நாடுகள் சிறப்பு அழைப்பாளர்களாக இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளன. ஆப்ரிக்க ஒன்றியத்துக்கும் சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அழைப்பை ஏற்று மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 13) புதுடெல்லியில் இருந்து புறப்பட்டார். இன்று அபுலியா சென்ற அவர், ஜி 7 உச்சி மாநாட்டில் பங்கேற்றார். மாநாட்டின் இடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சி மாநாட்டுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடியும், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானும் இன்று (14.06.2024) சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு இம்மானுவேல் மேக்ரான் வாழ்த்து தெரிவித்தார்.

'ஹொரைசன் 2047' செயல்திட்டம் மற்றும் இந்தோ-பசிபிக் செயல்திட்டம் ஆகியவற்றை மையமாகக் கொண்ட இந்தியா - பிரான்ஸ் இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பாதுகாப்பு, அணுசக்தி, விண்வெளி, கல்வி, பருவநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகள், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு, போக்குவரத்து இணைப்பு மற்றும் தேசிய அருங்காட்சியகம் தொடர்பான கூட்டு செயல்பாடு மற்றும் மக்களுக்கு இடையிலான உறவுகளை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து அவர்கள் விவாதித்தனர். பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் தீவிரப்படுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

செயற்கை நுண்ணறிவு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், எரிசக்தி மற்றும் விளையாட்டு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். 2025-ம் ஆண்டில் பிரான்சில் நடைபெறவுள்ள செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு மற்றும் ஐநா பெருங்கடல் மாநாடு ஆகியவை தொடர்பாக இருநாடுகளும் இணைந்து பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.

இரு தலைவர்களும், முக்கிய உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்சினைகள் குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். நிலையான மற்றும் வளமான உலக அமைப்பிற்கு இந்தியா மற்றும் பிரான்ஸ் இடையேயான வலுவான மற்றும் நம்பகமான உத்திசார் கூட்டு செயல்பாடு முக்கியமானது என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க இருதரப்பும் நெருக்கமாக பணியாற்றுவது எனவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர். பாரீஸில், ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெறுவது தொடர்பாக அதிபர் மெக்ரோனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரிஷி சுனக் உடன் நரேந்திர மோடி

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் உடனான பேச்சுவார்த்தை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் மூன்றாவது காலத்தில் இந்தியா-இங்கிலாந்து இடையே விரிவான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதற்கான எனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினேன். குறைக்கடத்திகள், தொழில்நுட்பம் மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் உறவுகளை ஆழப்படுத்துவதற்கு பெரும் வாய்ப்பு உள்ளது. பாதுகாப்புத் துறையில் உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் பேசினோம்" என்று தெரிவித்துள்ளார்.

விளாடிமிர் ஜெலன்ஸ்கி உடன் நரேந்திர மோடி

ஜி 7 உச்சிமாநாட்டின் இடையே உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சந்தித்து பிரதமர் மோடி பேசினார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியுடன் மிகவும் பயனுள்ள சந்திப்பு நடந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. நடந்துகொண்டிருக்கும் விரோதங்களைப் பொறுத்தவரை, இந்தியா மனிதனை மையமாகக் கொண்ட அணுகுமுறையை நம்புகிறது என்றும், பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதிக்கான வழியை காண முடியும் என்று இந்தியா நம்புகிறது என்றும் மீண்டும் வலியுறுத்தினேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யாவுக்கு ஆயுத உதிரிபாகங்களை அனுப்புவதை சீனா நிறுத்த வேண்டும் என்று ஜி7 வரைவு அறிக்கையில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உக்ரைனுக்கு எதிரான போரைத் தூண்டும் ஆணுத உதரிபாகங்களை ரஷ்யாவிற்கு அனுப்புவதை சீனா நிறுத்த வேண்டும் என ஜி7 தலைவர்கள் குழு சீனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

இந்தியா

3 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

22 hours ago

மேலும்