குவைத் விபத்து: 7 தமிழர்கள் உடல்கள் கொச்சி வந்தடைந்தது - சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை

By செய்திப்பிரிவு

கொச்சி: குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உட்பட 45 இந்தியர்களின் உடல்கள் இந்திய ராணுவ விமானத்தின் மூலம் கொச்சி கொண்டுவரப்பட்டன. இதில், கேரளாவைச் சேர்ந்த 23 பேர், தமிழகத்தைச் சேர்ந்த 7 பேர், ஆந்திராவைச் சேர்ந்த மூவர், கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரின் உடல்கள் கொச்சியில் ஒப்படைக்கப்படுகிறது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர்களின் உடல்களைப் பெற, கேரள முதல்வர் பினராயி விஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் மாநில அமைச்சர்கள் கொச்சி விமான நிலையம் வந்திருந்தனர்.

உயிரிழந்த தமிழர்களின் உடல்களைப் பெற, அயலக தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கேரள மாநிலம் கொச்சி வந்துள்ளார். தீ விபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த சிவசங்கரன் கோவிந்தன், கடலூரைச் சேர்ந்த சின்னத்துரை கிருஷ்ணமூர்த்தி, திண்டிவனத்தைச் சேர்ந்த முகமது ஷெரீப், தூத்துக்குடியைச் சேர்ந்த வீரசாமி மாரியப்பன், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பன் ராமு, திருச்சியைச் சேர்ந்த ராஜு எபநேசன், பேராவூரணியைச் சேர்ந்த ரிச்சர்ட் ராய் ஆகியோரின் உடல்கள் கொச்சி கொண்டுவரப்பட்டது.

அவர்களின் உடல்களுக்கு அஞ்சலி செலுத்தும் செஞ்சி மஸ்தான் அதன்பின், அவர்களின் உடல்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபடவுள்ளார்.

உடல்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கொச்சின் விமான நிலையத்தில் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவைச் சேர்ந்த 31 பேரின் உடல்கள் கொச்சியில் இருந்து சொந்த ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.

எஞ்சியுள்ள உடல்களை டெல்லி விமான நிலையத்துக்கு கொண்டு சென்று, அங்கிருந்து அவர்களின் ஊர்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடந்தது என்ன? வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தின் தெற்கு பகுதியில் உள்ள மங்காஃப் நகரில் 7 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் வெளிநாட்டு தொழிலாளர்கள் 196 பேர் தங்கியிருந்தனர். ஒரே நிறுவனத்தை சேர்ந்த இவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்கள்.

இந்த குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டின் சமையல் அறையில் நேற்று முன்தினம் அதிகாலை 4 மணி அளவில் திடீரென தீப்பற்றியது. கட்டிடம் முழுவதும் மளமளவென தீ பரவியதில் 49 பேர் உயிரிழந்தனர். 50 பேர் காயம் அடைந்தனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் 45 பேர் இந்தியர்கள். இவர்கள் அனைவரும் 20-50 வயதினர். 24 பேர்கேரளாவை சேர்ந்தவர்கள். இதில்தமிழகத்தை சேர்ந்த 7 பேரும் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்தது.

தொலைபேசி எண் அறிவிப்பு: விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்காக குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் 965 – 65505246 என்ற தொலைபேசி எண்ணை அறிவித்துள்ளது.

ரூ.5 லட்சம் நிவாரணம்: தீ விபத்து குறித்து வேதனை தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்த இந்தியர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார். அதேபோல் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE