கங்கனாவை பெண் காவலர் தாக்கிய விவகாரம்: பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்...!

By ஸ்ரீதர் சுவாமிநாதன்

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரை விட 74,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். கடந்த 6-ம் தேதியன்று டெல்லிக்குச் செல்வதற்காக சண்டிகர் விமான நிலையத்துக்கு கங்கனா வந்தார். அப்போது அங்கிருந்த பெண் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் எதிர்பாராத வகையில் கங்கனா ரனாவத்தை கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவமும் அதைத் தொடர்ந்து வெளியாகும் கருத்துக்களும் நாடு முழுவதும் பேசுபொருளாகி இருக்கின்றன.

கைது செய்யப்பட்ட பெண் காவலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், டெல்லியில் டைபெற்ற பஞ்சாப் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்ததால் அவரை அறைந்ததாக கூறியுள்ளார். விமான நிலையத்தில் நடைபெற்ற சோதனைக்கு கங்கனா ஒத்துழைப்பு அளிக்காததால் குல்விந்தர் கவுருக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் அதன் முடிவாகவே விவசாயிகள் பிரச்சினை வரை விவாதம் முற்றி கங்கனாவை காவலர் அறைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கங்கனாவை காவலர் குல்விந்தர் கவுர் அறைந்தது சரிதான் என்று சில கட்சிகள், அமைப்புகளின் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதற்கு சமூக வலைதளத்தில் பதிலளித்துள்ள கங்கனா, ‘குற்றவாளிகள் கூறும் காரணங்களை ஏற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவு அளித்தால், அது அனைத்து சட்டங்களையும் மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட தூண்டுவது போலாகிவிடும். ஒருவரின் உடலைத் தொடுவது, தாக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை ஆதரிப்பவர்கள் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற குற்றங்களையும் நியாயப்படுத்துவார்கள்’’ என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கடந்த திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசும்போது, ‘‘விவசாயிகள் குறித்து கங்கனா முன்பு தெரிவித்த கருத்துகளால் பெண் காவலர் கோபமடைந்திருக்கக் கூடும். இதனால், அவர் கங்கனாவை அறைந்திருக்கலாம். விவசாயிகளை தீவிரவாதிகள் என்று கங்கனா முன்பு கூறியிருந்தார். அதுவும் தவறுதான், அவரை பெண் காவலர் அறைந்ததும் தவறுதான்’’ என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கங்கனாவை அறைந்த பெண்காவலருக்கு ஆதரவாக பாடகரும் இசையமைப்பாளருமான விஷால் தத்லானி சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவருக்காக வேலை கொடுக்க தயாராக இருப்பதாக விஷால் தத்லானி தெரிவித்துள்ளார். உத்தவ் தாக்கரே சிவசேனா பிரிவு தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘‘சிலர் வாக்குகள் மூலம் தங்கள் எதிர்ப்பை காட்டுவார்கள். இன்னும் சிலர் அறைந்து எதிர்ப்பு தெரிவிப்பார்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

பெரியார் திராவிடர் கழகம் குல்விந்தர் கவுரைப்பாராட்டி அவருக்கு பெரியார் படம் பொறித்த தங்க மோதிரம் அனுப்பப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும், சமூக வலைதளங்களில் கங்கனாவின் கன்னத்தில் அறைந்ததால் விரல்கள் பதிந்து இருப்பது போன்ற படத்தை உருவாக்கி பதிவிட்டு பலர் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

பாஜகவினர் கங்கனா ரனாவத்துக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துக்கள், தவறாக இருந்தால் அதற்காக, அவர் மீது போலீஸில் புகார் அளிக்கலாம். நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு பதில் ஒருவரின் கருத்துக்களுக்காக அவரைத் தாக்குவதற்கு ஜனநாயகத்தில் இடமே இல்லை. இதை ஆதரிப்பதாக இருந்தால் சகிப்புத்தன்மையே இல்லாமல் போய்விடும். தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசும்போது, ‘‘டெங்கு, மலேரியா போல சனாதனத்தை ஒழிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

உதயநிதி வட மாநிலங்களுக்குச் செல்லும்போது இந்து மதத்தை தீவிரமாகப் பின்பற்றும் சனாதனப் பற்றாளர் ஒருவர், மரியாதைக்குரிய நமது அமைச்சரை அறைந்தால் தமிழ்நாட்டில் அதை நாம் பொறுத்துக் கொள்வோமோ? இதுபோன்ற செயல்களை அனுமதிக்கக் கூடாது. யாராக இருந்தாலும் கண்டிக்க வேண்டும் என்கிறார்கள் பாஜகவினர்.

மேலும் பாஜகவினர் கூறுகையில், ‘‘கடந்த 2018-ம் ஆண்டில் திருச்சியில் நடைபெற்ற உலக நாத்திகர் மாநாட்டில் பேசிய திமுக எம்.பி. கனிமொழி, ‘திருப்பதி கோயிலில் இறைவனுக்கு முன் இருக்கும் உண்டியலுக்கு அருகே ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் இருக்கிறார்கள். உண்மையில் கடவுள் இருக்கிறார் என்றால் அவரே உண்டியலை பாதுகாப்பாரே’ என்று பேசினார். இதற்கு ஆந்திராவில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் மீது வழக்கு பதிவு செய்ய கரீம் நகர் போலீஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நமது அன்புக்கும் மதிப்புக்கும் உரிய எம்.பி. கனிமொழியை அவர் ஆந்திரா செல்லும்போது வெங்கடாசலபதி பக்தராக உள்ள ஒரு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி தாக்க முற்பட்டால் நாம் கொந்தளித்துவிட மாட்டோமா?

இதேபோல, 1987-ம் ஆண்டு இலங்கையில் போரை முடிவுக்குக் கொண்டு வர இலங்கை அரசுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. அந்த சமயத்தில் நமது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி கொழும்பு சென்றார். அவருக்கு இலங்கை ராணுவம் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அப்போது, இந்தியாவின் ஒப்பந்தம் இலங்கையின் உரிமைகளில் தலையிடுவதாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இலங்கை கடற்படை வீரர் விஜேமுனி விஜித ரோஹண என்பவர் தன் துப்பாக்கியை திருப்பி அதன் கட்டையால் ராஜீவ் காந்தியை தாக்கினார். ராஜீவின் தோள்பட்டையில் அடி விழுந்தது. இலங்கை ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் கூட இதை ஆதரிக்க முடியுமா?

அவ்வளவு ஏன்? 2019-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது ராகுல் காந்தி ‘லலித் மோடி, நீரவ் மோடி, நரேந்திர மோடி என்று திருடர்கள் அனைவரின் பின்னால் ஏன் மோடி பெயர் இருக்கிறது?’ என்று பேசினார். இதற்காக, அவருக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, பின்னர், உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்திவைத்துள்ளது. மோடி என்பவர்கள் குஜராத்தில் கணிசமாக உள்ள பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர். ராகுலின் பேச்சுக்காக அவரை மோடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கன்னத்தில் அறைந்தால் காங்கிரஸார் நியாயம்தான் என்று ஒப்புக்கொள்வார்களா? யாருமே ஒப்புக்கொள்ள முடியாதே. எனவே, ஜனநாயகத்தில் எந்தக் கருத்தை யார் கூறினாலும் அதற்கு பதிலாக மற்றொரு கருத்துதான் இருக்க வேண்டுமே தவிர, வன்முறையாக இருக்கக் கூடாது’’ என்று தெரிவித்தனர்.

‘‘கங்கனா ரனாவத் பாஜக எம்.பி.யாக இல்லாமல் இருந்திருந்தால் அவரைத் தாக்கிய குல்விந்தர் கவுருக்கு அநீதியான ஆதரவு கிளம்பியிருக்காது. மோடி, பாஜக, இந்துத்துவா என்று பல்வேறு முனைகளிலும் உள்ள எதிர்ப்பு கருத்துக்கள்தான் ஒரு கட்டத்தில் இப்படி வன்முறையை ஆதரிக்கும் கண்மூடித்தனமான வக்கிர மகிழ்ச்சியாக மாறுகிறது. இது எந்த வகையிலும் ஜனநாயகத்துக்கு உகந்தது அல்ல’’ என்றும் கூறுகின்றனர் பாஜகவினர்!

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE