தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல், பிரதமரின் முதன்மைச் செயலாளராக பி.கே.மிஸ்ரா மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஜூன் 10 முதலே இந்த நியமனங்கள் அமலுக்கு வந்ததாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான அறிக்கையில், மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவலும், பிரதமரின் முதன்மைச் செயலராக பிகே மிஸ்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் பிரதமரின் பதவிக்காலம் வரை அல்லது மறு உத்தரவு வரும்வரை அப்பதவியில் நீடிப்பார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அஜித் தோவல், பிகே மிஸ்ராவுக்கு கேபினட் அமைச்சர்கள் அந்தஸ்து வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களின் மறுநியமனமானது இவ்விரு அதிகாரிகள் மீதும் பிரதமர் மோடி தனிப்பட்ட முறையில் கொண்ட நம்பிக்கையை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது .

அதேபோல் அமித் காரே, தருண் கபூர் ஆகியோர் பிரதமரின் ஆலோசகர்களாக மறு நியமனம் செய்யப்படுவதாகவும் அமைச்சரவை நியமனங்களுக்கான குழுவானது உறுதிப்படுத்தியுள்ளது. ஜூன் 10 தொடங்கி இவர்களது பதவிக் காலம் 2 ஆண்டுகள் வரை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மத்திய அரசு செயலாளர்கள் பதவி அந்தஸ்தில் நியமிக்கப்பட்டுள்ளனர். அப்பதவிக்கான ஊதியம், இன்னபிற சலுகைகளைப் பெறுவர்.

யார் இந்த் அஜித் தோவல்? - அஜித் தோவல் உளவுத் துறையின் முன்னாள் இயக்குநர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி வகித்து வருகிறார். 1968-ல் ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வான இவர் கீர்த்தி சக்ரா என்ற வீரதீர செயலுக்கான நாட்டின் இரண்டாவது உயரிய விருதைப் பெற்றவர் ஆவார். நாட்டின் பாதுகாப்பு கட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பதால் இவரே நாட்டின் மிக உயரிய அதிகாரியாக அறியப்படுகிறார்.

மத்தியில் 2014-ம் ஆண்டு பாஜக அரசு பதவியேற்றவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜித் தோவல் நியமிக்கப்பட்டார். உளவுப் பிரிவு, ராஜதந்திர நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் பெற்ற தோவல், ஆக்ரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற, 1968-ம் ஆண்டின் கேரள கேடர் ஐபிஎஸ் அதிகாரி ஆவார். இந்தியாவின் உளவு அமைப்புகளான ஐபி மற்றும் ‘ரா’வில் வெற்றிகரமாகப் பணியாற்றியவர். பஞ்சாப், மிசோரம் தீவிரவாதிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை தொடங்கி, காந்தகார் விமானக்கடத்தல், புல்வாமா தாக்குதல் என நாடு பல நெருக்கடியான நேரத்தில் அஜித் தோவல் திறம்படப் பணியாற்றி வெற்றியைத் தேடித் தந்தவர் என்பது நினைவுகூரத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE