புதுடெல்லி: மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சராக அமித் ஷா, நிதி அமைச்சராக நிர்மலாசீதாராமன், வெளியுறவு அமைச்சராகஜெய்சங்கர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை இணைச்சர்கள். 36 பேர் இணை அமைச்சர்கள்.
இந்நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. கடந்த அமைச்சரவையில் இடம்பெற்ற பலருக்கும் மீண்டும் அதே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியிடம் பணியாளர் நலன், பணியாளர் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறைகள் உள்ளன. புதிய அரசு பதவியேற்பு விழாவின்போது பிரதமர் மோடிக்கு அடுத்து ராஜ்நாத் சிங் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். ஏற்கெனவே வகித்த பாதுகாப்பு துறை அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சராக இருந்த அமித் ஷாவுக்கு மீண்டும் உள்துறை, கூட்டுறவு துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
கடந்த ஆட்சியில் நிதின் கட்கரி சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டுள்ளது. 3-வது முறையாக அவர் இத்துறையின் பொறுப்பை ஏற்கிறார்.
பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சுகாதாரம், குடும்ப நலத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், விதிஷா தொகுதியில் 8.20 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட அவருக்கு, வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சி துறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நிதித் துறை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல ஜெய்சங்கருக்கும் மீண்டும் வெளியுறவு துறையே வழங்கப்பட்டுள்ளது.
ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரம், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பியூஷ் கோயலுக்கு தொழில், வணிக துறை வழங்கப்பட்டுள்ளது. தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் கல்வித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவுக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டிருக்கிறது. அதோடு அவருக்கு செய்தி ஒலிபரப்பு துறை, மின்னணு, தகவல் தொழில்நுட்ப துறை வழங்கப்பட்டுள்ளது.
பாஜக மூத்த தலைவர் கிரிராஜ் சிங்குக்கு ஜவுளித் துறை, ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு தொலை தொடர்பு, வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சி துறை, அன்னபூர்ணா தேவிக்குமகளிர், குழந்தைகள் மேம்பாட்டு துறை,கிரண் ரிஜுஜுவுக்கு நாடாளுமன்ற விவகாரம், பூபேந்திர யாதவுக்கு சுற்றுச்சூழல், வீரேந்திர குமாருக்கு சமூகநீதி, ஜோயல் ஓரத்துக்கு பழங்குடியினர் நலம், பிரகலாத் ஜோஷிக்கு நுகர்வோர் விவகாரம் - உணவு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை, கிஷன் ரெட்டிக்கு நிலக்கரி, சுரங்கத் துறை, சர்வானந்த சோனோவாலுக்கு கப்பல்போக்குவரத்து, மன்சுக் மாண்டவியாவுக்கு தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு, இளைஞர் நலன், விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளன.
ஹர்தீப் சிங் புரி கடந்த ஆட்சியில் பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
குஜராத் பாஜக தலைவராக இருந்த சி.ஆர்.பாட்டீல் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு ஜல் சக்தி துறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்த மத்தியஇணை அமைச்சர் எல்.முருகனுக்கு தகவல், செய்தி ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகார துறை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தை சேர்ந்தநிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகிய 3 பேர் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.
கூட்டணி கட்சியான தெலுங்கு தேசத்தை சேர்ந்த ராம்மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்து துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. லோக் ஜனசக்தி (ராம்விலாஸ்) கட்சி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு உணவு பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டுள்ளது.
பிஹார் முன்னாள் முதல்வரும், இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா தலைவருமான ஜிதன்ராம் மாஞ்சிக்கு குறு, சிறு, நடுத்தர தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதல்வரும், மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு கனரக தொழில், உருக்கு துறை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தள மூத்த தலைவர் ராஜீவ் ரஞ்சன் சிங்குக்கு மீன்வளம், கால்நடை, பால்வளம், பஞ்சாயத்து ராஜ் துறைகள் வழங்கப்பட்டுள்ளன. ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ரயில்வே துறை கோரப்பட்டது. ஆனால் அந்த கட்சிக்கு ரயில்வே ஒதுக்கப்படவில்லை.
உள்துறை, பாதுகாப்பு, நிதி, வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படாமல், பாஜக மூத்த தலைவர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
இந்தியா
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
22 hours ago