பண்டித ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்று அவரது சாதனையை சமன் செய்திருக்கிறார் நரேந்திர மோடி. சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 543 இடங்களில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இதில் பாஜக மட்டும் 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆட்சி அமைக்கத் தேவையான 272 என்ற மெஜாரிட்டி இடங்கள் பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் கிடைக்காவிட்டாலும் பிஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளுடன் தேர்தலுக்கு முன்பே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாய கக் கூட்டணிக்கு மக்கள் அறுதிப் பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். அந்த முடிவுகளின்படி, பாஜக தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றுள்ளது
கூட்டணி அரசு என்பது இந்தியாவுக்கு புதியதல்ல. 1989-ம் ஆண்டில் வி.பி. சிங் அரசு தொடங்கி, மன்மோகன் சிங் அரசின் 2014-ம் ஆண்டு வரை மக்களவைத் தேர்தலில் எந்த ஒரு தனிப்பட்ட கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் 25 ஆண்டுகள் கூட்டணி அரசுகள்தான் ஆட்சியில் இருந்தன. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் நரேந்திர மோடி தலைமையில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.
தொடர்ந்து 2019-லும் பாஜக தனித்தே 303 இடங்களைக் கைப்பற்றியது. கடந்த முறை பாஜகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைத்து ஆட்சி அமைத்தபோதும் ஒரு வகையில் அது கூட்டணி அரசுதான். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய குடியரசுக் கட்சி (அதவாலே) தலைவர் ராம்தாஸ் அதவாலே, கடந்த மோடி அரசில் சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறை இணை அமைச்சராக பணியாற்றினார். தற்போது, ஆட்சி அமைப்பதில் கூட்டணிக் கட்சிகளின் பங்களிப்பு அதிகமாக இருப்பதால் அவர்களுக்கு பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வகையில் அமைச்சரவையில் கூடுதலாக இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
2006-ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணி மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனாலும், திமுகவுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 96 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. என்றாலும், மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்ற கூட்டணி என்ற அடிப்படையில் திமுக ஆட்சி அமைத்தது. அதேபோலத்தான், தற்போது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கிறது. அதுவும் பிரதமர் மோடியின் தலைமையில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துவிட்டு, தொடர்ந்து 3-வது முறையாக பாஜக தலைமையிலான காங்கிரஸ் அல்லாத கூட்டணி வெற்றி பெற்றிருப்பது இந்திய அரசியலின் அதிசயம்.
2006-ல் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைந்த ஆட்சியை அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா ‘மைனாரிட்டி அரசு’ என்று குறிப்பிட்டு வந்தார். ஏனெனில், கூட்டணி வெற்றி பெற்றாலும், மெஜாரிட்டி இல்லாத திமுக மட்டுமே ஆட்சி அமைத்தது. மற்ற கூட்டணிக் கட்சிகள் அரசில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. ஆனால், தற்போதைய மோடி தலைமையிலான மத்திய அரசை ‘மைனாரிட்டி அரசு’ என்று அழைக்க முடியாது. ஏனென்றால், பாஜக மட்டுமின்றி, தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும் ஆட்சியில் பங்கேற்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளன. இது அரசின் ஸ்திரத்தன்மையை மேலும் உறுதிப்படுத்தும்.
இதற்கிடையே, கடந்த 1-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற இண்டியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்துக்குப் பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘தேர்தலில் இண்டியா கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெறும்’’ என்று அறிவித்தார். ஆனால், காங்கிரஸின் இந்த எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் நிறைவேறவில்லை. என்றாலும், ஆட்சி அமைக்கும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டது. ‘ராகுல் காந்தி பிரதமராவதை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா போன்ற கூட்டணிக் கட்சிகளும் பச்சைக் கொடி காட்டின. இதைத் தொடர்ந்து தேர்தலில் தங்களுக்கு எதிராகப் போட்டியிட்ட, பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதாதளம் தலைவர் நிதிஷ் குமார் ஆகியோரை தங்கள் அணிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்தது. இருவரும் அதை ஏற்க மறுத்துவிட்ட நிலையில், காங்கிரஸின் ஆட்சி அமைக்கும் கனவு நனவாகவில்லை.
1977-ம் ஆண்டு பதவியேற்ற பிரதமர் மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா அரசு உட்கட்சி பூசலால் கவிழ்ந்தது. காங்கிரஸ் ஆதரவுடன் சரண்சிங் பிரதமரானார். வெறும் 24 நாட்களே பிரதமராக நீடித்த சரண்சிங் பதவியை ராஜினாமா செய்தார். ‘‘இந்திரா காந்தியால் அறிவிக்கப்பட்ட நெருக்கடி நிலை காலம் தொடர்பான வழக்குகளை திரும்பப் பெறுமாறு ‘பிளாக் மெயில்’ செய்யப்படுவதை ஏற்க தயாராக இல்லாததால் ராஜினாமா செய்கிறேன்’’ என்று சரண்சிங் வெளிப்படையாக அறிவித்தார்.
வி.பி. சிங் தலைமையிலான அரசு கவிழ்ந்து 1990- நவம்பரில் காங்கிரஸ் ஆதரவுடன் பிரதமராக சந்திரசேகர் பதவியேற்றார். அப்போது, ராஜீவ் தலைமையிலான காங்கிரஸும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவும் கூட்டணியாக இருந்தன. விடுதலைப் புலிகளை அப்போதைய திமுக அரசு ஆதரிப்பதாகக் கூறி 1991 ஜனவரி 30-ல் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியை சந்திரசேகர் கலைத்தார். அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த ராஜீவ் காந்தியின் நெருக்கடியால்தான் திமுக ஆட்சியை சந்திரசேகர் கலைத்ததாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன் பிறகு இரண்டே மாதங்களில் ராஜீவ் காந்தியின் வீட்டை மத்திய அரசு உளவு பார்த்ததாகக் கூறி சந்திரசேகர் ஆட்சியை காங்கிரஸ் கவிழ்த்தது.
1991-ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டார். அப்போது நடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மெஜாரிட்டி கிடைக்கவில்லை. என்றாலும், சிறிய கட்சிகள், சுயேச்சைகள் ஆதரவு மைனாரிட்டி அரசின் பிரதமராக பொறுப்பேற்ற நரசிம்மராவ் மற்ற கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்காமலேயே சாமர்த்தியமாக 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்தார்.
1996-ம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காத நிலையில், காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா தலைமையில் ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு பதவியேற்றது. என்றாலும், தேவகவுடா அரசு தாங்கள் இழுத்த இழுப்புக்கு வரவில்லை என்று கூறி அரசுக்கு ஆதரவை வாபஸ் பெறுவதாக காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், தேர்தலைத் தடுக்க காங்கிரஸோடு ஐக்கிய முன்னணி சமரசம் செய்து கொண்டது. காங்கிரஸின் விருப்பப்படி பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த தேவகவுடாவுக்குப் பின் 1997 ஏப்ரல் 21-ல் ஐக்கிய முன்னணி சார்பில் ஐ.கே.குஜ்ரால் புதிய பிரதமராக பதவியேற்றார். அவரது அரசும் 7 மாதங்களே நீடித்தது. ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக விசாரித்த ஜெயின் கமிஷன் விடுதலைப் புலிகளுக்கும் திமுகவுக்கும் தொடர்பு இருந்ததாக தனது அறிக்கை யில் குற்றம் சாட்டியது. இதைத் தொடர்ந்து மத்திய அரசில் இருந்து திமுக அமைச்சர்களை நீக்க காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. அதை ஏற்க குஜ்ரால் மறுத்ததால் அவரது அரசையும் காங்கிரஸ் கவிழ்த்தது.
இப்படி, கடந்த காலங்களில் தனது ஆதரவு பெற்ற கூட்டணி அரசு களை ஆட்டிப் படைத்த காங்கிரஸ், தற்போது ஆட்சி அமைக்கவும் வழியில்லாமல், கூட்டணி அரசை ஆட்டிப்படைக்கவும் முடியாமல் கலக்கத்தில் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். பாஜக க்கு தனி மெஜாரிட்டி கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், பாஜக வெற்றி பெற்ற 240 இடங்களை ஒட்டுமொத்த இண்டியா கூட்டணியாலும் பெற முடியவில்லை. ஒரு திரைப்படத்தில் கவுண்ட மணியிடம் செந்தில் சொல்வதுபோல, ‘‘நீங்க எஸ்எஸ்எல்சி ஃபெயில்ணே.. நான் 8-வது பாஸ்ணே’’ என்பது தான் இன்றைய காங்கிரஸ் நிலைமை!
முக்கிய செய்திகள்
இந்தியா
13 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
7 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago