உடல்களுடன் 36 மணி நேரம் இருந்தோம்: உயிர்பிழைத்த மலையேற்ற வீரர்கள் தகவல்

By செய்திப்பிரிவு

டேராடூன்: உத்தராகண்டில் உள்ள மலைப்பகுதியில் கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் மற்றும் உள்ளூர் வழிகாட்டிகள் என மொத்தம் 22 பேர் அடங்கிய குழுவினர் கடந்த மே 29-ம் தேதி மலையேற்றத்தில் ஈடுபட்டனர்.

ஜூன் 3-ம் தேதி அவர்கள் அடிவாரத்தை நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, பனிப் புயல் காரணமாக 9 பேர் உயிரிழந்தனர். தீவிர தேடுதல் பணியில் இறங்கிய மீட்புக் குழு, உயிர்பிழைத்த 13 வீரர்களை மீட்டு வந்தது.

கர்நாடகா மலையேற்ற சங்கத்தின் செயலர் ஸ்ரீவாஸ்தா, உயிர்பிழைத்த வீரர்களை மருத்துவமனைக்கு சென்று சந்தித்தார். இது குறித்து அவர் கூறுகையில், “மலையேற்ற வீரர்கள் மலை அடிவாரத்தை நோக்கி இறங்கிக் கொண்டிருந்தபோது கடுமையான பனிப் புயல் வீசியுள்ளது. அவர்களது குளிர் ஆடைகள் அனைத்தும் காற்றில் பறந்தன. அவர்களால் அந்தக் குளிரைத் தாங்க முடியவில்லை. கடும் புயலால் எதிரே என்ன இருக்கிறது என்பதைக்கூட அவர்களால் பார்க்க முடியவில்லை. ஒருவழியாக அவர்கள் பாறை ஒன்றை கண்டுபிடித்து அதன் அருகே சென்றனர்.

இதனிடையே உடல் சோர்வு, போதிய ஆக்ஸிஜன் இன்மை காரணமாக 9 வீரர்கள் சுருண்டு விழுந்து இறந்தனர். மீதமுள்ள வீரர்களால் அங்கிருந்து நகர முடியவில்லை. அவர்கள் தனிபெட்டியில் உணவு வைத்திருந்தனர்.

ஆனால், கடுமையாக காற்று வீசியதால் அதைத் திறந்து சாப்பிட முடியவில்லை. இதனால், அவர்களது உடல் நிலையும் சரிந்து வந்தது. அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை. உயிரிழந்த தங்கள் சக வீரர்களுடன் அவர்கள் 36 மணி நேரம் அப்படியே இருந்துள்ளனர்.

இதன் பிறகு அடிவாரத்திலிருந்து வழிகாட்டிகள் மற்றும் சில மலையேற்ற வீரர்கள் மேலே சென்று, புயலில் சிக்கிய வீரர்களுக்கு உதவியுள்ளனர்.

இதில் 71 வயது மலையேற்ற வீராங்கனை ஆஷா சுதாகரும் உயிரிழந்துள்ளார். அவரும் அவரது கணவரும் மலையேற்றத்தில் நீண்ட அனுபவம் கொண்டவர்கள். அவரது கணவர்தான் இந்தக் குழுவுக்கு தலைமை வகித்தார். அதிருஷ்டவசமாக அவர் பிழைத்து விட்டார்.

குழுவில் இருந்த மற்றவர்களுக்கு மலையேற்றத்தில் அனுபவம் உண்டு. இது கடினமான பாதையும் இல்லை. மோசமான வானிலை காரணமாகவே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது” என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE