மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க வேண்டும்: காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரி, காங்கிரஸ் செயற்குழுவில் நேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெற 10 சதவீத தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி கடந்த 2 பொதுத் தேர்தல்களில் 10 சதவீத இடங்களில் வெற்றி பெறாததால், எதிர்க்கட்சி தலைவர் பதவியை பெறமுடியவில்லை. இந்த முறை காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், எதிர்க்கட்சி தலைவர் அந்தஸ்தை பெறவுள்ளது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்த ஆராய காங்கிரஸ் செயற்குழு கூட்டம் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமை தாங்கினார். சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா உட்பட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் மக்களவைத் தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

எதிர்க்கட்சி தலைவராகிறார் ராகுல்: மேலும், மக்களவை எதிர்க்கட்சி தலைவராக, ரே பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தியை நியமிக்க காங்கிரஸ் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தையடுத்து ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவராகிறார்.

மேலும், காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில், காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவராக சோனியா காந்தி நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் பதவிக்கு சோனியா காந்தியின் பெயரை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே முன்மொழிந்தார். மூத்த தலைவர்கள் கவுரவ் கோகாய், தாரிக் அன்வர் மற்றும் கே.சுதாகரன் ஆகியோர் வழிமொழிந்தனர்.

தலைமையேற்க சிறந்த நபர்: செயற்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் கூறும்போது, ‘‘மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்கும்படி காங்கிரஸ் செயற்குழு ஒருமனதாக வேண்டுகோள் விடுத்துள்ளது. நாடாளுமன்றத்துக்குள் தலைமை தாங்க ராகுல் காந்தி மிகச் சிறந்த நபர்’’ என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE