புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை பிரதமர் நரேந்திர மோடி இன்று சந்தித்து பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க அவருக்கு குடியரசுத் தலைவர் அழைப்பு விடுத்தார். அதன்பின் பேசிய பிரதமர் மோடி, “நாட்டுக்குச் சேவை செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளார்கள்” என்றார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, அக்கூட்டணியின் கூட்டம் டெல்லியில் உள்ள பழைய நாடாளுமன்ற கட்டடத்தின் மைய அரங்கில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்களான சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் உள்பட அனைத்து தலைவர்களும், புதிதாக எம்பிக்களாக தேர்தெடுக்கப்பட்டவர்களும் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் குழுத் தலைவராக நரேந்திர மோடியின் பெயரை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்மொழிந்தார். தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதனை வழிமொழிந்தார். இதன்பின் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒவ்வொருவராக பேசி பிரதமராக மோடியை தேர்வு செய்வதற்கு தங்கள் ஆதரவினை தெரிவித்தனர். தொடர்ந்து மக்களவை பாஜக தலைவராகவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவராகவும் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
என்டிஏ-வின் இந்த முக்கிய முடிவை அடுத்து, பாஜக மூத்த தலைவரான எல்கே அத்வானியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து மலர்க்கொத்து கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து, பாஜகவின் மற்றொரு மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷியை பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்தார். அப்போது, பிரதமர் மோடிக்கு சால்வை அணிவித்து முரளி மனோகர் ஜோஷி வாழத்து தெரிவித்தார்.
» சிக்கிம் மாநில முதல்வராக ஜூன் 10-ல் பிரேம் சிங் தமாங் பதவியேற்பு
» ‘மேன் ஆஃப் த மேட்ச்’ ராகுல் காந்தியே எதிர்க்கட்சி தலைவர் ஆகவேண்டும்: சசி தரூர்
இந்தச் சந்திப்பை அடுத்து, டெல்லியில் உள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை பிரதமர் மோடி அவரது இல்லத்தில் சந்தித்தார். மோடியை வாசலுக்கு வந்து வரவேற்ற ராம்நாத் கோவிந்த், அவருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
இதனையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதன் தொடர்ச்சியாக, ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.
இதன் தொடர்ச்சியாக குடியரசுத் தலைவர் மாளிகையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “சிறிது நேரம் முன்புதான் குடியரசுத் தலைவர் என்னை அழைத்தார். பிரதமராகப் பணிபுரியச் சொன்னார். பதவியேற்பு விழா குறித்து கேட்டார். வரும் 9-ம் தேதி மாலையில் பதவியேற்பு விழா நடைபெறுவது எங்களுக்கு உகந்ததாக இருக்கும் என்று குடியரசுத் தலைவரிடம் தெரிவித்துள்ளேன். இனி, மற்ற விஷயங்களை குடியரசுத் தலைவர் மாளிகை மேற்கொள்ளும். அதற்குள் நாங்கள் அமைச்சர்கள் பட்டியலை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைப்போம்.
நாட்டுக்குச் சேவை செய்ய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மக்கள் மூன்றாவது முறையாக வாய்ப்பு அளித்துள்ளார்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாடு வேகமாக முன்னேறியது. ஒவ்வொரு துறையிலும் மாற்றத்தை பார்க்க முடிகிறது. 25 கோடி மக்கள் வறுமையில் இருந்து மீண்டது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையான தருணம்.
எங்களைப் போலவே, ஊடகவியலாளர்களாகிய நீங்களும் தேர்தல்களின் போது கடுமையாக வேலை பார்த்தீர்கள். வெவ்வேறு இடங்களுக்குச் சென்று செய்தி சேகரித்தீர்கள். ஊடக உலகில் உள்ள எனது நண்பர்கள் அனைவரின் உடல் நலமும் நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன். 18-வது மக்களவை, ஒரு வகையில், புதிய ஆற்றலுடன், ஏதாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது. 2047-ல் சுதந்திரத்தின் 100-வது ஆண்டை நாடு கொண்டாட உள்ள நிலையில் இந்த 18-வது மக்களவை, நாட்டு மக்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் ஒரு முக்கிய மைல் கல்லாக இருக்கும்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
10 mins ago
இந்தியா
54 mins ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
23 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago