‘ப்ராஜெக்ட் சுரேஷ் கோபி’... - கேரளாவில் தாமரை மலர்ந்தது எப்படி?!

By மலையரசு

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் நடிகர் சுரேஷ் கோபி. அவரது வெற்றியின் மூலமாக கேரள மாநிலத்தில் பாஜக முதன்முதலாக கால்பதித்துள்ளது. கேரளாவில் பாஜகவுக்கு பலத்த எதிர்ப்புகள் இருந்தபோதிலும் சுரேஷ் கோபி எப்படி தாமரையை மலர வைத்தார்?

நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய பிறகு இதுவரை மூன்று முறையில் திருச்சூரில் களம்கண்டுள்ளார் சுரேஷ் கோபி. 2019-ல் மக்களவை தேர்தலில் முதல் முறையாக களமிறங்கினார். இதன்பின் 2021 சட்டமன்ற தேர்தல். இந்த இரண்டு தேர்தல்களிலும் தோல்வியே. ஆனால், இந்த தேர்தல்களில் திருச்சூரில் பாஜகவின் வாக்கு வங்கி கணிசமாக அதிகரித்தது. அதனால், தனது 'ஆபரேஷன் தாமரை' திட்டத்துக்கு சுரேஷ் கோபியே சரியான நபர் என்று 2024 மக்களவை தேர்தலிலும் அவரையே தேர்வு செய்தது பாஜக.

கிட்டத்தட்ட 'ப்ராஜெக்ட் சுரேஷ் கோபி' என்று சொல்லக் கூடிய அளவிலேயே திருச்சூரில் பாஜக தனது திட்டங்களை செயல்படுத்தியது. மக்களவை தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கும் முன்னரே, திருச்சூரின் வேட்பாளர் சுரேஷ் கோபி தான் என்றார் பாஜகவின் 'சாணக்கியர்' அமித் ஷா. இது அவரின் பிரச்சாரத்துக்கு கூடுதல் தெம்பை கொடுத்தது. அதற்கு வலு சேர்க்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அங்கு நான்கு தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டார். இதுதவிர, சுரேஷ் கோபியின் மகளின் திருமணத்தையும் நடத்தி வைத்தார் மோடி.

பாஜகவின் இத்தகைய செயல்கள் அவற்றின் ஆஸ்தான இந்து வாக்காளர்களை சிலிர்ப்பிக்க தவறவில்லை. ஆனால், திருச்சூரில் இந்துக்களை தாண்டி குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி கொண்டுள்ள கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பிரிவினர் வைத்துள்ளனர். அவர்களிடம் சுரேஷ் கோபியை கொண்டு சேர்த்து, அவரின் வெற்றிக்கு மிகவும் பங்களித்தது சுரேஷ் கோபியின் பாப்புலாரிட்டியும், அவரின் வள்ளல் இமேஜும்.

இறந்துபோன தனது மகள் நினைவாக அறக்கட்டளை மூலம் திருச்சூர் தொகுதியில் தொண்டு பணிகளை செய்து வருகிறார் சுரேஷ் கோபி. கடந்த பல ஆண்டுகளாகவே இதனை அவர் தொடர்கிறார். அரசியல் இறங்கி, திருச்சூர் வேட்பாளராக மாறிய பிறகு இந்த தொண்டு பணிகளை தீவிரப்படுத்தி வந்தார். அறக்கட்டளையின் நிதியைப் பயன்படுத்தி தொண்டுகள் மூலம் திருச்சூரில் தனக்கென க்ளீன் இமேஜை, குறிப்பாக பெண் வாக்காளர்களிடம் வளர்க்க, அது தற்போதைய தேர்தலில் வாக்குக்கான ஆதரவாக மாறியது.

பெண் வாக்காளர்கள் சுரேஷ் கோபியை தேர்ந்தெடுத்ததுக்கு சாட்சிதான், பிரதமர் மோடி தலைமையில் திருச்சூரில் நடத்தப்பட்ட பாஜகவின் மகளிர் மாநாடு. பெண் வாக்காளர்களைக் கவரும் உத்தியாக அமைந்த இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பலர் சுரேஷ் கோபியின் தொண்டுகளால் பயன் அடைந்தவர்கள் என்கிறது பாஜக தரப்பு.

திருச்சூரில் இந்துக்களை தாண்டி குறிப்பிடத்தக்க வாக்கு வங்கி கொண்டுள்ளனர் கிறிஸ்தவர்கள். அவர்களை ஈர்க்கும் பொருட்டு, கடந்த சில மாதங்களாகவே, கோயிலுக்கு செல்வது போல் தேவாலயங்களுக்கு தவறாமல் விசிட் அடித்த சுரேஷ் கோபி, உச்சபட்சமாக தனது பிரச்சாரத்தின் போது, ​​லூர்து மாதா தேவாலயத்துக்கு தங்க கிரீடம் வழங்கி அனைத்து மதங்களையும் மதிக்கும் விசுவாசியாக தன்னை முன்னிறுத்துவதில் கவனம் செலுத்தினார். இதன் விளைவு, சுரேஷ் கோபி வழங்கிய கிரீடம், தங்க முலாம் பூசப்பட்டது என எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம் சோஷியல் மீடியாக்களை ஆக்கிரமித்தாலும், கிறிஸ்தவர் வாக்காளர்கள் மத்தியில் அது தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

பிரச்சாரத்தின்போது பேச்சுக்கள் நடனங்களை வைத்து கேலி, தங்க முலாம் சர்ச்சை, செய்தியாளருக்கு பாலியல் துன்புறுத்தல் சர்ச்சை, வழக்குப் பதிவு என ஒட்டுமொத்த ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளும் சுரேஷ் கோபியை டார்கெட் செய்தது அவருக்கு பாதிப்பை ஏற்படுத்துவதை விடுத்து அனுதாப அலைகளை உருவாக்கியது.

இதுதவிர, மணிப்பூர் வன்முறை மற்றும் குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பிரச்சினைகள் என அவரை எதிர்த்த கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஆகியவை பாஜகவை குறி வைத்து பிரச்சாரம் செய்தன. ஆனால், சுரேஷ் கோபியோ திருச்சூரின் வளர்ச்சியை முன்வைத்து பிரச்சாரங்களை முன்னெடுத்தார். கொச்சி மெட்ரோ ரயிலை திருச்சூர் வரை நீட்டிக்கப்படும் என்பது சுரேஷ் கோபியின் முக்கிய தேர்தல் வாக்குறுதி. திருச்சூரின் நெரிசலுக்கு தீர்வு உட்பட இன்னும் பல திட்டங்கள் இதில் அடக்கம்.

இன்னொன்று, மத்தியில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொண்டால் சுரேஷ் கோபிக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற பாஜகவின் வெளிப்படையான பிரச்சாரமும் அவருக்கு சாதகமாக அமைந்தது எனலாம். இப்படியாக, தேசியத் தலைமையின் நேரடிக் கண்காணிப்பில் பாஜகவின் இயந்திரம் திருச்சூரில் கூடுதல் நேரம் வேலை செய்ய வரலாற்றில் முதல்முறையாக கேரளத்தில் தாமரையை மலர வைத்தார் 'சூப்பர் ஸ்டார்' சுரேஷ் கோபி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

20 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

22 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்