புதுடெல்லி: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியால் (பிஎஸ்பி) 14 தொகுதிகளை சமாஜ்வாதி இழந்துள்ளது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாத பிஎஸ்பியால் பாஜக பலன் அடைந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி. தலித் ஆதரவுக் கட்சியான பிஎஸ்பிக்கு உபியில் செல்வாக்கு சரிவடைந்து வருகிறது. தற்போது முடிந்த மக்களவைத் தேர்தலில் எவருடனும் கூட்டணி இன்றி பிஎஸ்பி தனித்து போட்டியிட்டது. மற்றக் கட்சிகளை விடவும் அதிகமான வேட்பாளர்களையும் பிஎஸ்பி நிறுத்தியிருந்தது. ஜுன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளில் பிஎஸ்பிக்கு வாக்கு சதவீதம் குறைந்து 19 சதவீதம் கிடைத்துள்ளது. இதற்குமுன் கடைசியாக பிஎஸ்பிக்கு 32 சதவீதம் வாக்குகள் கிடைத்தன.
2014 முதல் அடிக்கத் துவங்கிய மோடி அலை உத்தரப்பிரதேசத்தில் 2024ல் ஓய்ந்துள்ளது. இதன் காரணமாக 2019ல் பாஜகவுக்கு கிடைத்ததை விட 21 தொகுதிகள் குறைவாக கிடைத்துள்ளன. ஜுன் 4ல் வெளியான தேர்தல் முடிவுகளின்படி 33 தொகுதிகளில் பாஜகவுக்கு வெற்றி கிடைத்துள்ளன. சமாஜ்வாதி 37, இதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 6, ஆசாத் சமாஜ் (கன்ஷிராம்) கட்சித் தலைவரான சந்திரசேகர் ஆசாத்தும் வெற்றி பெற்றுள்ளார்.
இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தின் 14 தொகுதிகளில் சமாஜ்வாதியை வென்ற பாஜகவின் வெற்றி வித்தியாச வாக்குகளைவிட அதிகமாக அங்கு மாயாவதியின் பிஎஸ்பி பெற்றுள்ளது. இந்த தொகுதிகளில் பிஎஸ்பி போட்டியிடவில்லை எனில், பாஜக 14 தொகுதிகளில் வெற்றியை இழந்து இன்னும் மோசமான தோல்வியை சந்தித்திருக்கும்.
மீரட்டில் போட்டியிட்ட நடிகர் அருண் கோவிலை பாஜக ராமரின் அவதாரமாக முன்னிறுத்தியது. இவர், 1987ல் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வெளியான பிரபல ராமாயாணம் தொடரில் ராமராக பாத்திரம் ஏற்றவர். இவர், மீரட்டில் சமாஜ்வாதியின் சுனித் வர்மாவை 10,585 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார்.
இதே மீரட்டில் பிஎஸ்பி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை 87,025. அக்பர்பூரில் சமாஜ்வாதியின் ராஜாரம் பால், 44,345 வாக்குகளில் தோல்வி அடைந்தார். பாஜக வெற்றி பெற்ற இங்கு பிஎஸ்பி பெற்ற வாக்குகள் 73,140. அலிகரில் பாஜக எம்பி சதீஷ் கவுதம் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இங்கு அவர் சமாஜ்வாதியின் பிஜேந்தர் சிங்கை 15,647 வாக்குகளில் வெற்றி பெற்றுள்ளார். பிஎஸ்பி வேட்பாளர் அலிகரில் பெற்ற வாக்குகள் எண்ணிக்கை 1,23,929.
இதுபோல், அம்ரோஹா, பரூகாபாத், பூல்பூர், ஷாஜஹான்பூர், உன்னாவ், ஹர்தோய், மிஸ்ரிக், பன்ஸ்காவ்ன், மிர்சாபூர், பதோஹி மற்றும் பிஜ்னோர் தொகுதிகளில் மாயாவதியின் பிஎஸ்பி, பாஜக வெற்றி வித்தியாசத்தை விட அதிகம் பெற்றுள்ளது.
இது குறித்து தன் கட்சிக்காரர்கள் எழுப்பும் கேள்விக்கு மாயாவதி, ‘அரசியல் கட்சியாக இருந்துகொண்டு தேர்தலில் போட்டியிடாமல் இருக்க முடியாது’ எனக் கூறி வருவதாகத் தகவல்கள் கிடைக்கின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
இந்தியா
5 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
17 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago