தனிப் பெரும்பான்மை கிடைக்காததால் பாஜக கூட்டணி அரசுக்கு காத்திருக்கும் சவால்கள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மத்தியில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. இந்த சூழலில் பாஜகவின் பிரதான கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) மூத்த தலைவர் கே.சி.தியாகி நேற்று கூறியதாவது:

மத்தியில் பாஜக கூட்டணி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கு வோம். எனினும் எங்களது சில கோரிக்கைகளை பாஜகவிடம் எடுத்துரைப்போம்.

நாடு முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பை நடத்த வேண்டும். ராணுவத்தில் அமல்படுத்தப்பட்டிருக்கும் அக்னி பாதை திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம். நாங்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கவில்லை. ஆனால் அனைத்து தரப்பினருடனும் கருத்தொற்றுமையை ஏற்படுத்திய பிறகே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

பிஹாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று நீண்ட காலமாக போராடி வருகிறோம். எங்களது இந்த கோரிக்கைகளை மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் இவ்வாறு கே.சி.தியாகி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணி அரசுக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து அரசியல் நோக்கர்கள் கூறியதாவது: மக்களவைத் தேர்தலில் உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது 16 எம்பிக்களை வைத்திருக்கும் தெலுங்கு தேசம், 12 எம்பிக்கள் கொண்ட ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் மத்தியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது. கூட்டணி கட்சிகளின் நெருக்கடியால் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் எழுந்திருக்கிறது.

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக வலியுறுத்தி வருகிறது. இந்த திட்டத்துக்கு ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு அளிக்கிறது. ஆனால் தெலுங்குதேசம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனவே ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது கடினம்.

கடந்த 2021-ம் ஆண்டில் நடத்தப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடர்ந்து காலதாமதம் செய்யப்பட்டு வருகிறது. வரும் 2027-ம்ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படலாம். இதன்பிறகு மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட உள்ளன.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய தென் மாநிலங்களில் மக்கள் தொகை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால்உத்தர பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்களில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால் வடமாநிலங்களில் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும்.

தென் மாநிலங்களுக்கு சில தொகுதிகள் மட்டுமே கூடுதலாக கிடைக்கும். இதன் காரணமாக நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும். ஆந்திராவில் ஆட்சிப் பொறுப்பு ஏற்க இருக்கும் தெலுங்குதேசம், தொகுதி மறுவரையறை விவகாரத்தில் மத்திய அரசுக்கு கடுமையாக அழுத்தம் கொடுக்கக்கூடும்.

பாஜக 3-வது முறை ஆட்சி அமைத்தால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் பொது சிவில் சட்டத்துக்கு முட்டுக்கட்டையாக இருக்கக்கூடும். எனவே பாஜக தலைமை தனது பிரதான கொள்கைகளை தற்காலிகமாக ஒத்தி வைக்கக்கூடும்.

மத்திய அமைச்சரவையில் தெலுங்கு தேசமும் ஐக்கிய ஜனதா தளமும் முக்கிய இலாக்காக்களை கோரி வருகின்றன. இந்த விவகாரங்களில் பாஜக தலைமை சமயோஜிதமாக செயல்படக்கூடும்.

பாதுகாப்பு, நிதித் துறை, உள்துறை, வெளியுறவுத் துறை உள்ளிட்ட முக்கிய இலாக்களை பாஜக தன்வசமே வைத்திருக்கும். ரயில்வே உள்ளிட்ட இலாகாக்கள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படலாம். ஆந்திராவுக்கும் பிஹாருக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வாய்ப்பிருக்கிறது. இவ்வாறு அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

16 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

1 day ago

மேலும்