ஒரே விமானத்தில் நிதிஷுடன் பயணம் | ராமர் ஆசி இண்டியா கூட்டணிக்கே: தேஜஸ்வி பேட்டி

By செய்திப்பிரிவு

பாட்னா: மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பாஜக பெறவில்லை. இந்த சூழலில் பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமாரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தேஜஸ்வி யாதவும் ஒரே விமானத்தில் டெல்லி பயணம் மேற்கொண்டனர்.

தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) நிதிஷ் குமார் உள்ளார். இண்டியா கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆட்சி அமைப்பது தொடர்பாக என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணி கட்சிகள் இன்று ( ஜூன் 5) டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றன. இதில் பங்கேற்கவே இருவரும் டெல்லி சென்றுள்ளனர்.

இருவரும் விஸ்டாரா விமானத்தில் பிஹாரின் பாட்னாவில் இருந்து டெல்லி புறப்பட்டனர். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 99 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. ஆந்திராவில் ஆட்சி அமைக்க உள்ள தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு, என்டிஏ கூட்டணியில் அங்கம் வகிப்பதாக தெரிவித்தார்.

டெல்லி புறப்படுவதற்கு முன்பு பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ் “அயோத்தியில் பகவான் ராமரின் ஆசி இண்டியா கூட்டணிக்கு கிடைத்தது. தேர்தலில் எங்களது செயல்பாடு சிறந்த வகையில் இருந்தது. மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்தலை எதிர்கொண்டோம். மோடியின் பிம்பம் உடைந்துள்ளது.

பாஜக பெரும்பான்மை பெறவில்லை. ஆட்சி அமைக்க கூட்டணி கட்சியினரை சார்ந்துள்ளனர். அரசியலமைப்பை பாதுகாத்ததில் நாங்கள் மகிழ்ச்சி கொள்கிறோம்” எனத் தெரிவித்திருந்தார்.

மேலும், தான் பயணிக்கின்ற அதே விமானத்தில் நிதிஷ் குமார் பயணிப்பது தனக்கு தெரியாது என அவர் தெரிவித்தார். நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி அமைத்து பிஹாரில் ஆட்சி அமைத்தன. கடந்த ஜனவரியில் முதல்வர் பொறுப்பில் இருந்து விலகிய நிதிஷ், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து மீண்டும் முதல்வர் ஆனார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE