நிதிஷ், சந்திரபாபுவுக்கு இண்டியா கூட்டணி வலை: தேசிய அரசியலில் மாற்றத்துக்கு எதிர்க்கட்சிகள் முயற்சி

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: மக்களவை தேர்தல் முடிவுகளால் தேசிய அரசியலில் பல மாற்றங்களை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன. இதற்காக, என்டிஏவின் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமாருக்கு வலை வீசி வருகின்றனர்.

நேற்று (செவ்வாய்க்கிழமை) வெளியான மக்களவை தேர்தல் முடிவுகள், தேசிய அரசியலை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டது. இந்த முடிவுகளில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மைக்கு தேவையான 272-தொகுதிகளுக்கு மாறாக, 240 தொகுதிகளே கிடைத்துள்ளன. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) ஆட்சி அமைக்கும் அளவில் 293 தொகுதிகளை பெற்றுள்ளது. இண்டியா கூட்டணிக்கு பெரும்பான்மைக்கும் குறைவாக 232 தொகுதிகள் மட்டுமே கிடைத்துள்ளன.

இச்சூழலில், பாஜக கூட்டணியில் தெலுங்கு தேசத்தின் (டிடிபி) சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளத்தின் (ஜேடியு) நிதிஷ் குமாரும் ‘கிங் மேக்கர்கள்’ என்ற நிலையை பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் சேர்ந்து (ஜேடியு 12+டிடிபி 16) 28 தொகுதிகளை பெற்றுள்ளனர். நாயுடுவின் சகாவான பவண் கல்யாணின் ஜனசேனாவும் 2 தொகுதிகளை பெற்றுள்ளார்.

இவர்களது 28 தொகுதிகளாலும் என்டிஏவின் ஆட்சி மீண்டும் அமைகிறது. அதேசமயம், இந்த மூவரும் என்டிஏவிலிருந்து வெளியேறி இண்டியா கூட்டணிக்கு ஆதரவளித்தால், எதிர்கட்சிகளின் ஆட்சி அமையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக, என்டிஏவின் கூட்டணி உறுப்பினர்களான டிடிபி, ஜேடியுவை தங்கள் பக்கம் இழுத்து தேசிய அரசியலில் மாற்றங்களை உருவாக்கும் முயற்சியை இண்டியா கூட்டணி தொடங்கி உள்ளது.

இண்டியா கூட்டணியின் மூத்த தலைவரான தேசியவாத காங்கிரஸின் சரத் பவார், நாயுடு மற்றும் நிதிஷுக்கு நேற்று போன் செய்து பேசியதாக தகவல்கள் பரவி உள்ளன. ஆர்ஜேடியின் தலைவர் லாலுவின் தரப்பிலும் பிஹார் முதல்வர் நிதிஷை தொடர்புகொள்ள முயற்சிக்கப்படுகிறது.

பிரதமர் மோடி, டிடிபி தலைவர் நாயுடுவிற்கு நேற்று போன் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் நிதிஷின் வீட்டிற்கு அவரது ஆதரவுக் கட்சியான பாஜகவின் துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். முதல்வர் நிதிஷை, துணை முதல்வர் சாம்ராட்டால் நேற்று சந்திக்க முடியவில்லை. இதையடுத்து தேசிய அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை இணையத்திடம் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் வட்டாரம் கூறும்போது, ‘பிரதமராக மோடி 2014-ல் முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து என்டிஏவிலிருந்து வெளியேறியவர் நிதிஷ் குமார். இவர் துணை பிரதமராகும் அளவிற்கு நல்வாய்ப்பு கிடைத்துள்ளது. இதேபோல் டிடிபியின் சந்திரபாபு நாயுடுவும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறோம். இது முடியவில்லை என்றாலும், என்டிஏவின் ஆட்சி பிரச்சினையின்றி தொடரும் எனக் கூற முடியாது.’ என்று தெரிவித்தனர்.

மாநில அரசியலில் மெஜாரிட்டி இல்லாமலே பிஹாரில் தொடர்ந்து 9-வது முறை முதல்வராகத் தொடர்பவர் நிதிஷ்குமார். இவர் என்டிஏவில் இருந்தார். பிறகு லாலுவுடன் என ஐந்து முறை கூட்டணிகளும் மாறியபடி இருந்தார். தற்போது பாஜகவை எதிர்க்கும் இண்டியா கூட்டணி முதல்வர் நிதிஷ் குமாரால் உருவாக்கப்பட்டது. இதன் பின்னணியில் அவர் இண்டியாவின் பிரதமர் வேட்பாளராகும் விருப்பம் இருந்தது.

ஆனால், அவர் கூட்டணியின் தலைவராகக்கூட அமர்த்தவில்லை என்பதால் இண்டியா கூட்டணியில் இருந்து முதல்வர் நிதிஷ் வெளியேறி இருந்தார். தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை முதல்வர் நிதிஷ் பயன்படுத்திக் கொள்ள மாட்டார் என அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றனர். இதற்கு 73 வயது நிதிஷ்குமாரின் வயோதிகம் காரணம் எனக் கருதப்படுகிறது. அவர் என்டிஏ ஆட்சியில் அதிக மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் பதவியை பெற்று பிஹாருக்கு தனி அந்தஸ்து பெற்று வளர்ச்சியடைய முயல்வார் எனவும் கூறப்படுகிறது.

அடுத்த வருடம் அக்டோபரில் பிஹார் சட்டப்பேரவை தேர்தல் வரும் சமயத்தில் அவருக்கு பலன் கிடைக்கவில்லை எனில் முடிவை மாற்றுவார் எனவும் கூறப்படுகிறது. டிடிபியின் சந்திரபாபு நாயுடுவிற்கு தம் மாநிலத்தை ஆள்வதில்தான் அதிக விருப்பம் எனத் தெரிகிறது. இவரது மகனான லோகேஷ், டிடிபியின் பொதுச்செயலாளராக உள்ளார். இந்தமுறை சட்டப்பேரவை தேர்தலிலும் எம்எல்ஏவாக வென்றுள்ள லோகேஷும் மாநில அரசியலில் அதிக விருப்பம் காட்டுவதாகத் தெரிகிறது.

எனவே, என்டிஏவின் ஒருங்கிணைப்பாளர் பதவியுடன், ஆந்திராவிற்கு தனி அந்தஸ்து பெறுவதும் நாயுடுவின் நோக்கம் எனக் கருதப்படுகிறது. இச்சூழலில், இன்று என்டிஏ உறுப்பினர்கள் கூட்டமும், இண்டியாவின் கூட்டமும் டெல்லியில் கூடுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE