ஆந்திராவில் ஆட்சியை பிடித்தது தெலுங்கு தேசம் கூட்டணி: சந்திரபாபு 4-வது முறை முதல்வராகிறார்

By என். மகேஷ்குமார்

அமராவதி: ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில்,தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. அமராவதியில் வரும் 9-ம் தேதி சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்.

ஆந்திர மாநிலத்தில் உள்ள 175 சட்டப்பேரவை மற்றும் 25 மக்களவை தொகுதிகளுக்கு கடந்த மே மாதம் 13-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தெலுங்கு தேசம் மற்றும் அதன் கூட்டணி வெற்றி பெற்றது. குப்பம் தொகுதியில் தொடர்ந்து 9-வது முறையாக களத்தில் இறங்கிய சந்திராபாபு நாயுடு, அவரை எதிர்த்து போட்டியிட்ட பரத் என்பவரை வென்றார். பிட்டாபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் வெற்றி பெற்றார்.மொத்தம் உள்ள 175 தொகுதிகளில் தெலுங்கு தேசம் 133 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 தொகுதிகளிலும் பாஜக 8 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அதன்படி 160க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

அதே சமயம், கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சி புரிந்த ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்தது. இக்கட்சி வெறும் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியாமல் தோல்வியை தழுவியது. இதன் காரணமாக 21 இடங்களில் வெற்றி பெற்ற பவன் கல்யாண் எதிர்கட்சி தலைவர் ஆகலாம் என்றும் கூறப்படுகிறது. ஜெகன் கட்சியை சேர்ந்த அமைச்சர்களான ரோஜா உட்பட பலர் தோல்விஅடைந்தனர். முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் பீலேர் தொகுதியில் போட்டியிட்ட பெத்திரெட்டி ராம சந்திர ரெட்டி ஆகியஇருவர் மட்டுமே அமைச்சரவையில் இருந்து வெற்றி பெற்றனர்.

இதே போன்று மொத்தமுள்ள 25 மக்களவை தொகுதிகளில் தெலுங்கு தேசம் 16 தொகுதிகளையும், ஜனசேனா 2 தொகுதிகளையும், பாஜக 3 தொகுதிகளையும் வென்றுள்ளது. ஆளும் ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சி வெறும் 4 மக்களவை தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தெலுங்குதேசம் கூட்டணி வெற்றி பெற்றதைதொடர்ந்து, நேற்று காலை 11. 30 மணியிலிருந்தே தொண்டர்கள், நிர்வாகிகள் உற்சாகத்துடன் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாட தொடங்கிவிட்டனர். பல இடங்களில் கேக்வெட்டி கொண்டாடப்பட்டன. தொண்டர்கள் ஒருவர் மீது மற்றொருவர் சாயத்தை பூசிக்கொண்டுதங்கள் கட்சியின் வெற்றியை படுஉற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

பிரதமர் மோடி வாழ்த்து: அமராவதியில் வரும் 9-ம் தேதிநடைபெறும் நிகழ்ச்சியில் சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில், பிரதமர் மோடி, சந்திரபாபு நாயுடுவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார். பதிலுக்கு சந்திரபாபு நாயுடுவும் பிரதமர் மோடி மற்றும் அமித் ஷா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE