ஜெகன்மோகனின் படுதோல்விக்கு காரணமான 8 தவறுகள்

By செய்திப்பிரிவு

அமராவதி: கடந்த 2019 சட்டப்பேரவை தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி 175 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு 151-ல் மாபெரும் வெற்றிகண்டது. அதற்கு முன் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு மக்களிடம் குறை, நிறைகளை கேட்டறிந்தார்.

அதன் பின்னர் 2019-ல் நடந்த தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியை முதன் முறையாக பிடித்தது. மக்களின் ஏகோபித்த ஆதரவு கொண்ட கட்சி 5 ஆண்டுகளில் செய்த 8 தவறுகளே அதன் படு பாதாள வீழ்ச்சிக்கு காரணமாகி விட்டது.

1. ஆந்திராவின் பொருளாதார நிலைமை சீர் குலைந்துபோனது. எதற்கெடுத்தாலும், நல திட்டங்களுக்கு மக்களுக்கு பணம் கொடுத்ததால் பொருளாதார ரீதியாக மிகவும் சரிவை சந்தித்தது ஜெகன் அரசு. இதனால், மத்திய அரசிடம் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டது.

2. ஜெகன் கட்சி அறிவித்த வேட்பாளர்கள் மீது ஏற்கெனவே மக்கள் மிகுந்த வெறுப்புடனும், அதிருப்தியுடன் இருந்தனர். அவர் களையே தொகுதிகளை மாற்றி இந்த தேர்தலில் போட்டியிட வைத்த தும் ஜெகன் தோல்விக்கு ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

3. கடந்த 5 ஆண்டுகளில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி ஒருமுறை கூட மக்களை நேரில் சந்திக்கவில்லை. வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும் அவர் மக்களை தூர நிற்க வைத்து விட்டு, ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வுசெய்து விட்டு சென்று விடுவார்.மேலும், கடந்த 5 ஆண்டுகளில் ஜெகன்மோகன் ரெட்டி ஒரே ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நடத்தவில்லை.

4. தெலுங்கு தேசம் கட்சி யின் தேர்தல் அறிக்கை மக்களை வெகுவாக கவர்ந்ததே அக்கட்சியின் வெற்றிக்கும் காரணம். ஆண்டுக்கு 3 சமையல் காஸ் சிலிண்டர்கள் இலவசம், பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் உள்ளிட்ட பல திட்டங் கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், ஜெகன் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை மக்களை கவரவில்லை.

5. தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவை திடீரென ஒரு பொய் வழக்கு போட்டு கைது செய்ததும், கைது செய்தவிதமும் சரியில்லை என்பது பொதுமக்களின் கருத்து.

6. நிலப்பட்டாக்கள் மீது ஜெகன்மோகன் ரெட்டி தனது படத்தை அச்சிட்டு கொடுத்தார். இதற்காக புதிய திட்டத்தையும் ஜெகன் கொண்டு வந்தார். இதனால் கிராமப்புற மக்கள் பயந்து போய் தங்களின் நிலம் அபகரிப்புக்கு ஆளாகி விடுமோ என அச்சப்பட்டனர். அவரின் தோல்விக்கு இதுவும் காரணமாக கூறப்படுகிறது.

7. ஜெகன் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் முதற்கொண்டு முதல்வர் வரை எதிர்க்கட்சியினரை விமர்சிப்பதில் கீழ்தரமாக நடந்து கொண்டனர். சட்டபேரவையிலேயே சந்திரபாபுவின் மனைவி மீதும், அவரது நடத்தை மீதும் ஜெகன் கட்சியின் அமைச்சர்கள் கேவலமாக பேசினர். இதனால், 40 ஆண்டுகால அரசியல் அனுபவம் மிக்க சந்திரபாபுவே கண்ணீர் விட்டு அழுதபடி, “இனி இந்த அவைக்குள் வந்தால் முதல்வராகத்தான் வருவேன்” என சபதமிட்டு சென்றார்.

8. ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில், தொழில் வளம் இல்லை.பல தொழிற்சாலைகள் ஹைதராபாத், சென்னை போன்ற நகரங்களுக்கு சென்றுவிட்டன. இதனால் வேலை வாய்ப்பு இல்லை. கடந்த 5 ஆண்டுகளில் ஒரு அரசு பணியிடம் கூட நிரப்பப்படவில்லை. எங்கு பார்த்தாலும் ரவுடிகள் அராஜகம். நிலம் ஆக்கிரமிப்பு ஆகியவையும் ஜெகன் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE