உ.பி.யின் புதுயுக தலைவர்... - ‘பீம் ஆர்மி’ சந்திரசேகர் ஆசாத் வெற்றி முகம் @ மக்களவை தேர்தல்

By செய்திப்பிரிவு

சஹாரன்பூர்: ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் நகினா மக்களவை தொகுதியில் வெற்றி உறுதியாகியுள்ளது. அவர் 473339 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரை விட 136840 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி முகத்தில் உள்ளார்.

சந்திரசேகர் ஆசாத் யார்? - சில ஆண்டுகள் முன் மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து டெல்லி ஜும்மா மசூதியில் நடந்த பேரணிக்கு முக்கிய காரணகர்த்தாவாக அறியப்பட்டவர் சந்திரசேகர் ஆசாத். அந்தப் பேரணியில் தனது கையில் அரசியலமைப்பின் நகலையும், அம்பேத்கரின் புகைப்படத்தையும் ஏந்திக்கொண்டு முழக்கமிட்டது அவரை வெகு பிரபலமாக்கியது. சந்திரசேகர் ஆசாத் ராவண் என்றும் அழைக்கப்படும் இவரின் பூர்வீகம் மேற்கு உத்தரப் பிரதேசமான சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள காட்கவுலி என்ற கிராமம்.

டெல்லி ஜும்மா மசூதி பேரணி நாடு முழுவதும் அவரை பிரபலப்படுத்தினாலும், அதற்கு முன்பாகவே அவர் உத்தரப் பிரதேச மக்கள் மத்தியில், தனது 'பீம் ஆர்மி' அமைப்பு மூலமாகவும், சமூகப் பணிகள் மூலமாகவும் பிரபலமாக வலம்வந்தார். பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஆசாத், 'பீம் ஆர்மி' அமைப்பை தோற்றுவிக்க முக்கியக் காரணம், பகுஜன் சமாஜ் கட்சியை நிறுவிய கன்ஷிராம். சிறுவயது முதலே கன்ஷிராம் கருத்துகளால் வெகுவாக ஈர்க்கப்பட்டு, பட்டியலின மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வருகிறார். அந்த வகையில் பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகச் செயல்படும் நோக்கத்துக்காக 'பீம் ஆர்மி' அமைப்பை நிறுவி பணியாற்றிவந்தார்.

சில வருடங்கள் முன் நிகழ்ந்த சஹாரன்பூர் கலவரத்தின்போது பீம் ஆர்மி அமைப்பின் செயல்பாடு பட்டியலின மக்கள் மத்தியில் அவரை கொண்டுச் சேர்த்தது. சஹாரான்பூர் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களுக்கும் மாற்று சமூக மக்களுக்கும் இடையேயான கலவரத்தைக் கண்டித்து வலுவான போராட்டங்களை அந்த சமயத்தில் முன்னெடுத்தார் ஆசாத். அந்தப் போராட்டம் லட்சக்கணக்கான பட்டியலின இளைஞர்களை ஈர்க்க, புதுயுக தலைவராக உருவெடுத்தார். அதேபோல், குடியுரிமைச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்களுக்கு பிறகு கடந்த சில வருடங்களாக பாஜகவுக்கு எதிராக கடுமையான அரசியல் செய்தும் வருகிறார்.

2022ல் நடந்த உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில், கோரக்பூரில் யோகி ஆதித்யநாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சந்திரசேகர் ஆசாத், 4,501 வாக்குகள் மட்டுமே பெற்று டெபாசிட்டை இழந்தார். எனினும், தற்போதைய மக்களவை தேர்தலில் தனது கட்சியான ஆசாத் சமாஜ் சார்பில் சந்திரசேகர் ஆசாத் மட்டுமே போட்டியிட்டு, தற்போது வெற்றிவாகையும் சூட்டியுள்ளார். இதன்மூலம் உத்தரபிரதேசத்தில் புதுயுக தலைவராக உருவெடுத்துள்ளார் சந்திரசேகர் ஆசாத்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE