“மோடியின் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை மக்கள் தேர்ந்தெடுப்பர்” - சுஷ்மாவின் மகள் பன்சூரி நம்பிக்கை

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: பாஜகவின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை இந்திய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. இந்நிலையில், மறைந்த முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி சுவராஜ், புதுதில்லி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் தான் முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக அறிமுகமாகிறார்.

டெல்லியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோயிலில் அவர் பிரார்த்தனை செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நான் ஆசிர்வாதம் பெறவே கோயிலுக்கு வந்தேன். பாஜகவின் நலன் மற்றும் வளர்ச்சி சார்ந்த கொள்கைகளை இந்திய மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மூன்றாவது முறையாக மோடி அரசு அமையும் என்பதை நான் அறிவேன்" என்று கூறினார். இந்த தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியியைச் சேர்ந்த சோம்நாத் பாரதியை விட பன்சூரி ஸ்வராஜ் முன்னிலை பெற்றுள்ளதாக பல்வேறு கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

பன்சூரி ஸ்வராஜ் : வழக்கறிஞர் தொழிலில் 16 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் பன்சூரி. இந்திய உச்ச நீதிமன்றத்தில் பிரபல வழக்கறிஞராகவும் இருக்கிறார். அவர் முக்கியமாக சிவில், கிரிமினல், வணிகம் அரசியலமைப்பு தொடர்பான வழக்குகளைக் கையாளுகிறார். பன்சூரி துல்லியமாக சட்ட நுணுக்கங்களை தெரிந்து கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 2023-ஆம் ஆண்டு டெல்லியில் பாஜகவின் சட்டப் பிரிவின் இணை ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து பன்சூரியின் அரசியல் பாதை வேகம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE