எதிர்க்கட்சி தலைவர்களை வீட்டுக் காவலில் வைத்திருப்பதாக அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு @ உ.பி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: எதிர்க்கட்சி தலைவர்கள் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு செல்வதை தடுத்துள்ளதாக உத்தரப் பிரதேச அரசு மீது அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 543 தொகுதிகளில் பல்வேறு கட்டங்களாக ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன் 1-ந் தேதி வரை நடைபெற்றது. இதனையடுத்து இன்று (செவ்வாய் கிழமை) அனைத்து தொகுதிகளின் வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜகவுக்கு எதிராக ‘இண்டியா’ கூட்டணியில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தன.

நாட்டில் அதிக மக்களவை தொகுதிகளை (80) கொண்ட மாநிலமாக உபி. உள்ளது. இங்கு ஆளும் பாஜகவின் முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜ்வாதி உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் கடுமையான போட்டி நிலவி வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் தனது எக்ஸ் தளத்தில், “உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவர்களை காவல் துறை நிர்வாகம் வீட்டிலேயே சிறை வைத்துள்ளது. அவர்கள் இன்று நடக்கும் வாக்கு எண்ணிக்கையில் கலந்து கொள்ளக்கூடாது என்பதே மாநில அரசின் நோக்கமாக இருக்கிறது.

ஒரு தலைபட்சமாக செயல்படும் அதிகாரிகள் உடனடியாக நீக்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றமும், தலைமை தேர்தல் ஆணையமும் விரைந்து தலையிட வேண்டும்” என உத்தரப் பிரதேச அரசு மீது குற்றம்சாட்டியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE