“யாருக்கும் அஞ்சாதீர்கள்” - அரசு அதிகாரிகளுக்கு கார்கே கடிதம்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாளை மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் உள்ள அரசு அதிகாரிகளுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கார்கே எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டிருப்பதாவது: எதிர்கட்சி தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் என்ற முறையில் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகிறேன். யாருக்கும் அஞ்சாதீர்கள். அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான எந்தவொரு வழிமுறைக்கும் தலைவணங்க வேண்டாம். வாக்கு எண்ணும் நாளில் யாருக்கும் பயப்படாதீர்கள். தகுதியின் அடிப்படையில் உங்கள் கடமைகளை நிறைவேற்றுங்கள்.

நவீன இந்தியாவை உருவாக்கியவர்களால் எழுதப்பட்ட ஒரு துடிப்பான ஜனநாயகம் மற்றும் நீண்டகால அரசியலமைப்பை எதிர்கால சந்ததியினருக்கு வழங்க நாம் கடமைப்பட்டுள்ளோம்.

இந்தியா உண்மையான ஜனநாயக இயல்புடையதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், உங்கள் ஒவ்வொருவருக்கும் நான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் அரசியலமைப்பின் நமது லட்சியங்கள் கறைபடாமல் இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறேன்.

அதிகாரத்துவத்தின் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை இருக்கும் எந்தவொரு அதிகாரியும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில், ஆளுங்கட்சி/கூட்டணி கட்சி அல்லது எதிர்க் கட்சி ஆகியவற்றிடம் இருந்து எந்தவொரு வற்புறுத்தல், அச்சுறுத்தல், அழுத்தம் அல்லது மிரட்டல் இல்லாமல் தங்கள் கடமைகளை ஆற்ற வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

ஒட்டுமொத்த அதிகாரிகளும், அரசியலமைப்பு அடிப்படையில், யாருக்கும் அஞ்சாமல், யாருக்கும் சாதகமாக செயல்படாமல் தேசத்துக்கு சேவை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொள்கிறது” இவ்வாறு அந்த கடிதத்தில் கார்கே குறிப்பிட்டுள்ளார்.

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது, மேலும் தங்கள் கூட்டணி 295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று இண்டியா கூட்டணி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE