பெங்களூருவில் ஒரே நாளில் 111 மி.மீ மழை - 133 ஆண்டுகளுக்குப் பிறகு அதிகபட்ச மழை பதிவு!

By செய்திப்பிரிவு

பெங்களூரு: பெங்களூரில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வரலாறு காணாத மழை பெய்துள்ளது. அதாவது நேற்று அதிகபட்சமாக 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இது ஜூன் மாத்தில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழையின் அளவாகும். 1891-ஆம் ஆண்டு ஜூன் 16 ஆம் தேதி பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவான நிலையில், 133 ஆண்டு கால சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது.

கர்நாடகாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 111.1 மி.மீ மழை பதிவாகியுள்ளது. விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழையால் பெங்களூரில் ஒரு சில இடங்களில் மரங்கள் சாய்ந்தன. அதோடு பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. 1891 ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி பெங்களூரில் 101.6 மிமீ மழை பதிவான நிலையில், 133 ஆண்டுகால சாதனை நேற்று முறியடிக்கப்பட்டது. பெங்களூருவில் அதிகபட்சமாக ஹம்பி நகரில் 110.50 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

இன்று முதல் 5-ஆம் தேதி வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அவ்வப்போது இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை (மஞ்சள் எச்சரிக்கை) விடுத்துள்ளது.

இதனிடையே, மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விரைவில் சென்று ஆய்வு நடத்த உள்ளதாக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிகாரிகளுடன் கூட்டத்தை நடத்தி மழை தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்போம்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE