ஜெயராம் ரமேஷின் கோரிக்கை நிராகரிப்பு: அமித் ஷா விவகாரத்தில் உடனே பதிலளிக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: 150 மாவட்ட ஆட்சியர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாக தெரிவித்த கருத்து தொடர்பான தகவல்களை இன்று மாலை 7 மணிக்குள் அளிக்க வேண்டும் என்று ஜெயராம் ரமேஷுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடந்த 1-ம் தேதி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "பதவி பறிபோக உள்ள உள்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசி வருகிறார். இதுவரை 150 பேரிடம் பேசியுள்ளார். இது அப்பட்டமான மற்றும் வெட்கக்கேடான மிரட்டல். பாஜக எவ்வளவு அவநம்பிக்கையில் உள்ளது என்பதை இது காட்டுகிறது. மக்களின் விருப்பம் வெற்றிபெறும். ஜூன் 4-ஆம் தேதி மோடியும், அமித் ஷாவும், பாஜகவும் வெளியேறுவார்கள். இண்டியா கூட்டணி வெற்றி பெறும். அதிகாரிகள் எந்த அழுத்தத்துக்கும் ஆளாகாமல் அரசியல் சாசனத்தை நிலைநாட்ட வேண்டும். அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்" என தெரிவித்திருந்தார்.

அவரது இந்த எக்ஸ் பதிவை சுட்டிக்காட்டி, நேற்று (ஜூன் 2) ஜெயராம் ரமேஷுக்கு கடிதம் எழுதிய இந்திய தேர்தல் ஆணையம், "150 மாவட்ட ஆட்சியர்களுடன் உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். ஆனால், அதுபோல நடந்ததாக யாரும் இதுவரை ஆணையத்திடம் தெரிவிக்கவில்லை. நீங்கள் தெரிவித்திருக்கும் கருத்துகான ஆதாரங்களை இன்று (ஜூன் 2) மாலை 7 மணிக்குள் தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் உங்கள் குற்றச்சாட்டின் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்" என கூறி இருந்தது.

இதையடுத்து, தேர்தல் ஆணையத்துக்கு இன்று கடிதம் எழுதிய ஜெயராம் ரமேஷ், தான் தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பான விவரங்களை அளிக்க ஒரு வார காலம் அவகாசம் வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். இதனை ஏற்க மறுத்துள்ள இந்திய தேர்தல் ஆணையம், இன்று (ஜூன் 3) மாலை 7 மணிக்குள் விவரங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி பதில் கடிதம் எழுதியுள்ளது.

ஜெயராம் ரமேஷுக்கு எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், "150 மாவட்ட ஆட்சியர்களுடன் அமித் ஷா பேசியதாக நீங்கள் கூறி இருக்கிறீர்கள். மாவட்ட ஆட்சியர்கள்தான் மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் கூறி இருக்கும் குற்றச்சாட்டு, நாளை நடைபெற உள்ள வாக்கு எண்ணும் புனித கடமையுடன் தொடர்புடையது. ஜூன் 2ம் தேதி நாங்கள் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளபடி, நீங்கள் கூறியதுபோல அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாக புகார் வரவில்லை.

கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற உங்களின் கோரிக்கையை நாங்கள் திட்டவட்டமாக நிராகரிக்கிறோம். நீங்கள் கூறிய குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை இன்று (ஜூன் 3) மாலை 7 மணிக்குள் தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க வேண்டும். நீங்கள் தெரிவித்த குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் உங்களிடம் இல்லை என்பது உறுதியானால் உங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில், அவற்றில் பதிவான வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு உடனுக்குடன் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE