வடகிழக்கு மாநிலங்களில் பேரவை தேர்தல் முடிவுகள் வெளியீடு: அருணாச்சலில் பாஜக அபார வெற்றி

By செய்திப்பிரிவு

இடாநகர்/ காங்டாக்: அருணாச்சல பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அபாரவெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.

வடகிழக்கு மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் சிக்கிமில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து, சட்டப்பேரவை தேர்தல்களும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி நடத்தப்பட்டன. சட்டப்பேரவைகளின் பதவிக் காலம் நேற்றுடன் (ஜூன் 2) முடிவடைவதால், சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்றே நடத்தப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

அருணாச்சல பிரதேசத்தில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை தொகுதிகளில், முதல்வர் பெமா காண்டு உட்பட 10 பாஜக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். எஞ்சிய 50 சட்டப்பேரவை தொகுதிகள் மற்றும் மாநிலத்தின் 2 மக்களவை தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடந்தது.

ஆளும் பாஜக 60 சட்டப்பேரவை தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி இருந்தது. காங்கிரஸ் கட்சி19 தொகுதிகளில் போட்டியிட்டது.

வாக்கு எண்ணிக்கை முடிந்து, நேற்று பிற்பகலில் இறுதிகட்ட முடிவுகள் வெளியிடப்பட்டன. இதன்படி, மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 46 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது.

தேசிய மக்கள் கட்சி (என்பிஇபி) 5, தேசியவாத காங்கிரஸ் (என்சிபி)3, அருணாச்சல் மக்கள் கட்சி (பிபிஏ) 2, காங்கிரஸ் 1 இடங்களில் வெற்றிபெற்றன. 3 தொகுதிகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றிபெற்றனர். 2019 போல, இந்த முறையும் பெமா காண்டு முதல்வராக பதவியேற்பார் என தெரிகிறது.

சிக்கிம் மாநிலத்தின் ஒரு மக்களவை தொகுதி மற்றும் 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.

ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சி (எஸ்கேஎம்) 32 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. பிரதான எதிர்க்கட்சியான சிக்கிம் ஜனநாயக முன்னணி 32 தொகுதிகளிலும் போட்டியிட்டது. பாஜக 31 தொகுதிகளிலும், காங்கிரஸ் 12 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தின.

நேற்று வாக்கு எண்ணிக்கை நடந்து, பிற்பகலில் முடிவுகள் வெளியாகின. மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் ஆளும் எஸ்கேஎம் கட்சி 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. சிக்கிம் ஜனநாயக முன்னணிக்கு (எஸ்டிஎப்) ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. பாஜக, காங்கிரஸுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. எஸ்கேஎம் கட்சித் தலைவர் பிரேம் சிங் தமாங் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார்.

பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,‘வளர்ச்சி அரசியலுக்கு ஆதரவாக வாக்களித்து, பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பளித்த அருணாச்சல பிரதேச மக்களுக்கு நன்றி. சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்றஎஸ்கேஎம் கட்சிக்கும், முதல்வர் பிரேம் சிங் தமாங்குக்கும் வாழ்த்துகள்’ என்று தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 14 இடங்கள் உட்பட 415 தொகுதிகளில் பாஜக அணிக்கு வெற்றி: ‘டுடேஸ் சாணக்கியா’ கணிப்பு

புதுடெல்லி: கடந்த 2019 மக்களவை தேர்தலின்போது, பாஜக 300-314 இடங்கள், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 350-364 இடங்கள், காங்கிரஸ் 55-64 இடங்கள், அந்த கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 95-104 இடங்களை கைப்பற்றும் என்று ‘டுடேஸ் சாணக்கியா’ ஊடக நிறுவனம் துல்லியமாக கணித்து கூறியது.

இந்நிலையில், 2024 மக்களவை தேர்தலையொட்டி டுடேஸ் சாணக்கியா நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட கருத்துக் கணிப்பில், ‘பாஜக 335-350 இடங்கள், பாஜக கூட்டணி 400-415 இடங்களை கைப்பற்றும். காங்கிரஸுக்கு 50-61, இண்டியா கூட்டணிக்கு 107-118 இடங்கள் கிடைக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இண்டியா கூட்டணிக்கு 29-34 இடங்கள், பாஜக கூட்டணிக்கு 10-14 இடங்கள், அதிமுக கூட்டணிக்கு 0-2 இடம் கிடைக்கும் என்று கணித்துள்ளது

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE