புதுடெல்லி: ஏழாவது மற்றும் இறுதிக் கட்டமாக 57 மக்களவைத் தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 58.3 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் இதுவரை 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. இதில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் எஞ்சியுள்ள 57 மக்களவை தொகுதிகளுக்கு இறுதிக் கட்டமாக நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில் உத்தரபிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 9, பிஹாரில் 8, இமாச்சல பிரதேசத்தில் 4, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3, ஒடிசாவில் 6, சண்டிகரில் ஒரு தொகுதி, பஞ்சாபில் 13 உட்பட மொத்தம் 57 தொகுதிகள் அடங்கும். உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி, மிர்சாபூரில் பாஜக கூட்டணி கட்சியான அப்னா தளம் கட்சி சார்பில் மத்திய அமைச்சர் அனுபிரியா படேல், மேற்கு வங்கத் தின்டயமண்ட் ஹார்பர் தொகுதியில் அபிஷேக் பானர்ஜி (திரிணமுல் காங்கிரஸ்), பிஹாரின் பாடலிபுத்ராவில் லாலு மகள் மிசா பார்தி (ஆர்ஜேடி),
இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் மாநில அமைச்சர் விக்ரமாதித்யா (காங்கிரஸ்), பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் (பாஜக), ஹமீர்பூரில் மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர் (பாஜக) என 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்றைய தேர்தலில் வாக்களிக்க 5.24 கோடி ஆண்கள், 4.82 கோடி பெண்கள், 3,574 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 10.06 கோடி பேர் தகுதி பெற்றுள்ளனர். இந்தத் தேர்தலுக்காக 57 தொகுதிகளில் மட்டும் 1.09 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.
» ஜாமீன் நீட்டிப்புக்கு அமலாக்கத்துறை எதிர்ப்பு: கேஜ்ரிவால் இன்று திகார் சிறையில் சரண்
» விஜயவாடாவில் கலப்பட குடிநீர் குடித்ததில் உயிரிழப்பு 9 ஆக உயர்வு
இது தவிர மாநில போலீஸார், துணை ராணுவப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அதுமட்டுமல்லாமல், ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் இணைந்து சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் எஞ்சியுள்ள 42 தொகுதிகளுக்கும் நேற்று தேர்தல் நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவு மாலை வடைந்தது. 6 மணிக்கு நிறைவடைந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 57 தொகுதிகளில் சராசரியாக 58.3 சதவீத வாக்குகள் பதிவானதாக தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும், தொகுதி வாரியாக பதிவான துல்லியமான வாக்குப்பதிவு சதவீத எண்ணிக்கை இன்று மாலை தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த நிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களை வாக்குச்சாவடி அதிகாரிகள் சீல் வைத்து, போலீஸார், துணை ராணுவப் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து வாக்கு எண்ணும் மையங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரமாக வைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் பதிவான வாக்குகள் வரும் 4மீ தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு இயந்திரம் குளத்தில் வீச்சு: மக்களவை தேர்தலின் இறுதிகட்ட தேர்தல், 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நேற்று நடந்தது. மேற்குவங்கத்தில் 9 மக்களவை தொகுதிகளில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்ததாகபுகார்கள் எழுந்தன. ஜாதவ்பூர், டைமண்ட்ஹார்பர் ஆகிய தொகுதிகளில் திரிணமூல்,இந்திய மதச்சார்பற்ற முன்னணி (ஐஎஸ்எப்), பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. கொல்கத்தா வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் தபஸ் ராய், தொண்டர்கள் கள்ள ஓட்டு போட ஏற்பாடு செய்தார் என திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் கோஷம் எழுப்பினர். ஆனால், இந்த குற்றச்சாட்டை தபஸ் ராய் மறுத்தார். அனைத்து வாக்குச் சாவடிகளிலும் தேர்தல் ஏஜென்ட்கள் உள்ளனர். கள்ள ஓட்டு பற்றி தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறினார்.
ஜாதவ்பூர் தொகுதியில் பங்கர் என்ற இடத்தில், திரிணமூல் மற்றும் ஐஎஸ்எப் தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது இரு தரப்பினரும் நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதனால் போலீஸார் தடியடி நடத்தி கலவர கும்பலை கலைத்தனர். அவர்களிடமிருந்து நாட்டு வெடிகுண்டுகளையும் பறிமுதல் செய்தனர். ஜாய்நகர் தொகுதியில் குல்டுலி என்றஇடத்தில் நடைபெற்ற தேர்தலில், வாக்காளர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாகவும், முறைகேடு நடைபெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிலர் வாக்குச் சாவடியிலிருந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந்திரம் ஆகியவற்றை எடுத்துச் சென்று அருகில் உள்ள குளத்தில் போட்டனர். இதுபோல் நேற்று மதியம் 1 மணி வரை 1899 புகார்கள் வந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
முதல்வர்கள், தலைவர்கள், நடிகர்கள் வாக்களிப்பு: நாட்டில் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 6 கட்டத் தேர்தல் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் கடைசி கட்ட தேர்தல் நேற்று 57 தொகுதிகளுக்கு நடைபெற்றது. 7 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தில் உள்ள தொகுதிகளில் இந்த வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலின் போது மாநில முதல்வர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், வேட்பாளர்கள், நடிகர், நடிகைகள் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வாக்களித்தார். அதேபோல் பாட்னாவில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் பிஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தள (ஆர்ஜேடி) கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்களித்தார். இமாச்சல பிரதேச மாநிலத்தின் மண்டி தொகுதியில் போட்டியிடும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் வாக்களித்தார். பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் சிங், தனது மனைவியுடன் வந்து வாக்களித்தார். மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாக்குர், பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி, பாஜக தேசியத் தலைவர்
ஜே.பி. நட்டா, பிஹார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மாஞ்சி உள்ளிட்டோர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.
வாக்களித்த பின்னர் மூதாட்டிக்கு இறுதிச் சடங்கு செய்த குடும்பத்தினர்: பிஹாரில் மூதாட்டி உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினர் முதலில் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு பிறகு இறுதிச் சடங்குகளை செய்துள்ளனர். பிஹார் உள்ள 8 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் ஜெகனாபாத் தொகுதிக்குட்பட்ட தேவ்குலி கிராமத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர் நேற்று காலமானார். இந்நிலையில், அவரது மகன் உள்ளிட்ட குடும்பத்தினர் 115-வது வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்தனர்.
பின்னர் அந்த மூதாட்டிக்கு இறுதிச் சடங்குகளை செய்து தகனம் செய்துள்ளனர். இது குறித்து உயிரிழந்தவரின் மகன் மிதிலேஷ் யாதவ் கூறும் போது, "என் தாய் உயிரிழந்துவிட்டார். அவர் இனி உயிருடன் வரமாட்டார். அவரது தகனத்தை சிறிது நேரம் தள்ளி வைக்கலாம். ஆனால் தேர்தலை தள்ளி வைக்க முடியாது. தேர்தல் மறுபடியும் 5 ஆண்டுகள் கழித்து தான் வரும். எனவே, முதலில் வாக்களித்துவிட்டு என் தாய்க்கு இறுதிச் சடங்குகளை செய்வது என நானும் எனது குடும்பத்தினரும் கூடி ஆலோசனை செய்து முடிவு செய்தோம்' என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
42 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
3 hours ago
இந்தியா
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
13 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
14 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
19 hours ago