21 நாளையும், ரூ.190 கோடியையும் வீணாக்கிய எம்.பி.க்கள்: ‘மிஸ்டர் பொது ஜனத்துக்கு’ என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

By க.போத்திராஜ்

17 ஆண்டுகளுக்கு முன் நாடாளுமன்றத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது நாடே அதிர்ச்சியில் மூழ்கியது. நாட்டின் இறையாண்மை, ஜனநாயக நெறிமுறைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எம்.பி.க்கள் கூக்குரலிட்டார்கள். ஊடகங்கள் முன் ஒவ்வொருவராக பேட்டி அளித்து தங்களின் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள்.

ஜனநாயகத்தின் மீதும் இறையாண்மை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுவிட்டது என்று கண்டனக் குரல் எழுப்பியவர்கள் கடந்த 21 நாட்களாக நாடாளுமன்றம் முடங்கியபோது என்ன செய்து கொண்டிருந்தார்கள்?

ஒவ்வொரு நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் ஏதேனும் ஒரு பிரச்சினையை கிளப்பி முடக்குவதைத்தான் எதிர்க்கட்சியினர் வேலையாக வைத்திருக்கிறார்கள்.

இந்த அவை முடக்கும் விஷயத்தை பாஜக எதிர்க்கட்சியாக இருக்கும் போது செய்ததையும்  மறக்க முடியாது. இப்போது காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், பிராந்தியக் கட்சிகளும் பதிலுக்கு செய்கின்றன.

அன்று நாடாளுமன்றத்தின் மீது தாக்குதலை நடத்திய தீவிரவாதிகள் ஜனநாயகத்தை ‘கேள்விக்குறியாக்கினர்’ என்றால் இன்று எம்.பி.க்கள் ஜனநாயகத்தை ‘கேலிக்குரியதாக’ மாற்றி விட்டார்கள்.

21 நாட்கள்

நமது நாடாளுமன்றும் முறையாக எப்போது செயல்பட்டது என்பதே பலருக்கும் மறந்து விட்டது. அதிலும் 2018-19-ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-ம் அமர்வு தொடங்கியதில் இருந்து கடந்த 21 நாட்களாக ஒருநாள் கூட இரு அவைகளும் முழுமையாக செயல்படவில்லை என்பது வேதனைக்குரியது.

ஜனநாயகம் இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது என்பதைக் காட்டுவதே நாடாளுமன்றத்தின் ஆக்கபூர்வமான செயல்பாடுகளால்தான். ஆனால் கடந்த 21 நாட்களாக அவையை நடத்தவிடாமல் முடக்கியது ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிப்பதற்குச் சமம்.

ஒவ்வொரு நாளும் அவை 10 மணிக்கு தொடங்குவதும் பின்னர் 11 மணி வரை ஒத்திவைப்பு, பின்னர் இரண்டு மணி வரை ஒத்திவைப்பு, இறுதியாக நாள் முழுவதும் ஒத்திவைப்பு என்பதை கடந்த 21 நாட்களாக ஒரு சடங்காக செய்து வருகிறார்கள்.

தங்களின் மாநிலக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவையில் கூச்சலிடுவதும் நாடாளுமன்ற நுழைவாயிலில் நின்று பதாகைகளை ஏந்தி கோஷமிடுவதன் மூலம் கோரிக்கை நிறைவேறிவிடும் என்றால் நாடாளுமன்றம் நடத்தவேண்டிய அவசியமில்லை. மாறாக இதுபோன்ற கோஷத்தினாலேயே அனைத்தையும் சாதித்துவிடலாமே?

அவசியமென்ன?

StateMPsdisruptjpgதெலுங்கு தேசம் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய காட்சி100 

 

காவிரி நடுவர் மன்றம் அமைக்கக் கோரி கடந்த 21 நாட்களாக அவையை முடக்கிய அதிமுக எம்.பி.க்களுக்கும் தீர்வு கிடைக்கவில்லை; ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி போராட்டம் நடத்திய தெலங்குதேசம் கட்சிக்கும் நிதி கிடைக்கவில்லை; தெலங்கானா மக்களின் கோரிக்கையும் நிறைவேறவில்லை.

பின்பு ஏன் இந்த சம்பிரதாயப் போராட்டத்தையும் கோஷமிடும் சடங்குகளையும் எம்.பி.க்கள் வலிந்து செய்ததன் அவசியமென்ன?.

எம்.பி.க்களின் செயல்பாடுகளைப் பார்த்து மக்களவைத் தலைவர், மாநிலங்களவைத் தலைவர் வேதனைப்படுவதும், அவர்களை ஆற்றுப்படுத்த பேசுவதும், கண்டிப்பதும் ஒவ்வொரு நாளும் வேடிக்கையான நிகழ்வாக மாறியது.

உலகின் மிகப்பெரும் ஜனநாயக நாடு என மார்தட்டிக்கொள்ளும் நம்நாட்டின் நாடாளுமன்றத்தில் நடக்கும் இந்த கேலிக்கூத்துகளை உலகமே பார்த்து சிரித்தது.

மிஸ்டர் பொதுஜனங்களோ காசுக்கு வாக்களித்து தவறு செய்துவிட்டோமோ என்ற விரக்தியில் இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தின் நிலையைப் பார்த்தும், மக்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்காமல் எம்.பி.க்கள் அவையை முடக்குவதை டீக்கடைகளிலும், சலூன்களிலும், பேருந்துகளிலும், ரயில்களிலும் மக்கள் தங்களுக்குள் ஆவேசமாகப் பேசி ஆதங்கத்தை தீர்த்துக் கொள்கிறார்கள்.

இளைஞர்கள் நாடாளுமன்ற கூத்துகளை நகைச்சுவையாக ‘மீம்ஸ்’ உருவாக்கி சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

இத்தனை சலுகைகளா?

நாள் ஒன்றுக்கு 2000 ரூபாய், மலிவான விலையில் தரமான உணவு, இலவச ரயில் பயணம், 34 முறை இலவச விமானப் பயணம், மாதம் ரூ.2 லட்சம் ஊதியம், இதெல்லாம் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் எம்.பி.க்கள் பங்கேற்க வழங்கப்படும் சலுகைகள்.

ஒரு நிறுவனம், இதுபோன்று சலுகைகளை தன் ஊழியருக்கு வாரிக் கொடுத்தும், அந்த ஊழியர் தன் பணியை சரியாக செய்யாமல் இருந்தால், நிச்சயம் அவர் பணியில் இருந்து நீக்கப்படுவார் தானே?.

இங்கு நிறுவனத்தின் இடத்தில் இந்திய மக்களையும், ஊழியர்களின் இடத்தில் எம்.பி.க்களையும் வைத்துப் பாருங்கள். மக்களின் வரிப்பணத்தில் இருந்தே எம்.பி.க்களுக்கு சம்பளமும் சலுகைகளும் வழங்கப்படுகின்றன.

என்ன செய்யலாம்?

ஆனால், எம்.பி.க்கள் தங்கள் கடமையை நாடாளுமன்றத்தில் செய்யாவிட்டால் அவர்களை என்ன செய்வது?.

மக்கள் பிரச்சினைகளைப் பற்றித்தான் பேசுகிறோம் என்ற பெயரில், தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக, நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் எம்.பி.க்கள் செய்யும் அமளி, கூச்சல், கோஷத்தால் நாள்தோறும் மக்களின் வரிப்பணம் கோடிக்கணக்கில் வீணாகிறது.

மக்கள் பணிசெய்வது என்பது நாடாளுமன்றம் நடக்கும் போது கையெழுத்து போட்டுவிட்டு வெளியே வந்து டெல்லியை சுற்றிப்பார்க்கச் செல்வதும், தங்களின் கட்சியினர் நாடாளுமன்றத்தில் நடத்தும் களேபரத்தில் கலந்து கொண்டு வெளிநடப்பு செய்வதும் அல்ல மக்கள் பணி.

தீர்வு கிடைக்குமா?

மக்கள் எதற்காக தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்களோ, அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் கேள்விகளை தொடுத்து அதற்கு தீர்வு காணும் அவையாக மாற வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆக்கபூர்வ விவாதங்களை நடத்த வேண்டும். விவாதங்கள் மூலம்தான் தீர்வு பிறக்கும்.

ஆனால், மக்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் பேசுவதற்குப் பதிலாக முடக்குவதன் மூலம் மக்களின் நலன்கள் புறம் தள்ளப்படுகின்றன. கூச்சல்போடுவது மூலமும் ஒத்திவைப்பு மூலமும் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமா?

ஆங்கிலம், இந்தி, தமிழ் செய்தி தொலைக்காட்சி சேனல்கள் நடத்தும் விவாத நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்களின் வாதத்திறமையை பேச்சுத் திறனைஎடுத்து வைக்கும் எம்.பி.க்கள், அதில் 10 சதவீதத்தைக் கூட நாடாளுமன்றம் நடக்கும் போது அதில் கலந்துகொண்டு, விவாதிப்பதில்லை என்பது வேதனைக்குரியதாகும்.

அதிசயமாக என்றாவது நாடாளுமன்றம் ஒழுங்காக நடந்தால் கூட பெரும்பாலான உறுப்பினர்களின் இருக்கை காலியாகவே இருக்கிறது. இதுதான் நமது நாட்டின் பரிதாபமான நிலை.

120 நாட்கள்

நாடாளுமன்றம் ஆண்டுக்கு 120 நாட்கள் நடத்த வேண்டும் என்பது விதியாகும். நாடாளுமன்றம் கூடும் போது நாள் ஒன்றுக்கு மக்களவை 6 மணிநேரமும், மாநிலங்களவை 5 மணிநேரமாவது குறைந்தபட்சம் நடக்க வேண்டும் என்பது விதியாகும்.

ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடாளுமன்றம் ஆண்டுக்கு சராசரியாக 70 நாட்கள் தான் நடந்திருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா?

இங்கிலாந்து நாடாளுமன்றம் கடந்த 15 ஆண்டுகளாக 150 நாட்களும், அமெரிக்க நாடாளுமன்றம் 140 நாட்களும் நடத்தப்பட்டு நம்மை வெட்கித் தலைகுனிய வைக்கின்றன.

காவிரி நதிநீர் மேம்பாட்டு வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்களும், நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி தெலுங்குதேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளும், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீட்டை அதிகரிக்கக் கோரி தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி எம்.பி.க்களும் கடந்த 21 நாட்களாக நாடாளுமன்றத்தை முடக்கினார்கள்.

மக்களின் வரிப் பணத்தால்தான் நாடாளுமன்றம் நடக்கிறது என்ற உணர்வு இல்லாமல், தீர்வை நோக்கிச் செல்லா போராட்டமும், எம்.பி.க்களின் அமளியும், கோஷமும் எந்தவிதமான பலனையும் மக்களுக்கு தரப்போவதில்லை.

ரூ2.5 லட்சம்

நாடாளுமன்றம் நடத்துவதற்கு ஒரு நிமிடத்துக்கு ரூ.2.5 லட்சம் செலவாகிறது. குறைந்தபட்சம் 6 மணிநேரமாவது இரு அவைகளும் நடத்தப்பட வேண்டும்.

அப்படியென்றால் நாள் ஒன்றுக்கு நாடாளுமன்றத்தை நடத்த ரூ.9 கோடி செலவாகிறது. கடந்த 21 நாட்கள் அவை முடக்கத்தினால் ஏறக்குறைய மக்களின் வரிப்பணம் ரூ.190 கோடி வீணாகியுள்ளது.

நாடாளுமன்ற முடக்கம் என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் போது பாஜகவினர் முடக்குவதும், பாஜக ஆட்சியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முடக்குவதும் அரசியல் பழிவாங்கலாகவே இருந்து வருகிறது.

1980-களில் காங்கிரஸ் ஆட்சியில் போஃபர்ஸ் ஊழல் விவகாரம் தலைதூக்கியபோது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை 45 நாட்கள் புறக்கணித்தன. மறைந்த முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் ஆட்சியில், லஞ்சம் வாங்கியதாக அப்போதைய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் சுக்ராம் கையும் களவுமாகப் பிடிபட்டபோது, அவரைப் பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் 15 நாள் அவை நடவடிக்கையை புறக்கணித்தன.

இதேபோல, பிரதமர் வாஜ்பாய் ஆட்சியின்போது வெடித்த தெஹல்கா ஊழலாலும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 2ஜி ஊழல் விவகாரம் வெளியானபோதும் மழைக் கால கூட்டத் தொடரில் தொடர்ந்து 11 நாட்கள் நாடாளுமன்றம் முடங்கியது.

அவை முடக்கம் தொடர வேண்டுமா?

raghuljpgராகுல் காந்தி தலைமையிலா காங்கிரஸ் எம்.பி.க்கள் போராட்டம்100 

அவை முடக்கம் நடைமுறையைத்தான் ஒவ்வொரு கட்சியினரும் பின்பற்ற வேண்டுமா? அதே நடைமுறைதான் காலத்துக்கும் பின்பற்ற வேண்டுமா? .

காங்கிரஸ் கட்சியின் தலைமையில் ஏற்பட்ட மாற்றம் ஏன் கொள்கைகளிலும், செயல்பாடுகளிலும் மாற்றம் கொண்டுவரப்படவில்லை.

தங்களது ஊதியம், தினசரிப் படிகளை உயர்த்த வேண்டும் என ஒற்றுமையாகக் குரல் கொடுக்கும் எம்.பி.க்கள், நாடாளுமன்ற வளாகத்தில் தங்களுக்கு புகை பிடிக்க தனி இடம் கேட்டுப் பெறுவதில் அக்கறை காட்டும் எம்.பி.க்கள், மக்கள் பிரச்சினையைப் பற்றி மட்டும் தீர்க்கமாக, ஆக்கபூர்வமாக பேசுவதற்கு மட்டும் ஏனோ அசட்டையாக இருந்துவிடுகிறார்கள்.

ஏதோ தேர்தலில் ஓட்டளித்து விட்டோம், அத்துடன் நமது வேலை முடிந்து விட்டது என்ற மனப்பான்மை மிஸ்டர் பொதுஜனத்திடமிருந்து மாற வேண்டும்.

பொதுவெளியில், டீக்கடைகளில், சலூன்களில், ரயில் பயணத்தில், ஆலமரத்தடியில் அமர்ந்து மட்டும் தேசிய அரசியல் குறித்தும், எம்.பி.க்கள் செயல்பாடுகள் குறித்தும் பேசிக்கொண்டிருப்பதை தவிர்த்து தொகுதிக்கு வரும் எம்.பி.க்களை கேள்வி கேட்க மக்கள் முன்வர வேண்டும்.

கேள்வி கேளுங்கள்

தங்களுடைய உறுப்பினரின் செயல்பாடுகளைக் கவனித்து அது குறித்து கேள்விகளை அவரிடம் கேட்க வேண்டும். முறையாக செயல்படாத எம்.பி.க்களுக்கு பொது வாழ்வில் இருந்து விடுப்பு அளிக்க வேண்டும்.

நாடாளுமன்ற அவையை நடத்த விடாமல் தடுக்கும் உறுப்பினர்களிடமிருந்து அதற்குரிய இழப்பீட்டுப் பணத்தை வாங்க வேண்டும். நாடாளுமன்றத்துக்கு வராத அல்லது வந்து கையொப்பமிட்டு அரசின் சலுகையை மட்டும் அனுபவித்து வரும் எம்.பி.க்களை திரும்ப அழைப்பது என்பன உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை எடுத்தால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

கடந்த 21 நாட்கள் முடக்கத்தால் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் மக்களுக்கு பயனிக்கும் ஏராளமான மசோதாக்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன.

நாடளுமன்ற மக்களவையில் இருந்து இணைக்குழுவுக்கு அனுப்பப்பட்ட, நிலம் கையகப்படுத்துதல், குடியுரிமை திருத்த மசோதா, நிதித்தீர்வு மற்றும் வைப்புத்தொகை காப்பீடு ஆகிய மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.

மேலும் நிலைக்குழுவுக்கு 3 மசோதாக்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படாமல் 11 மசோதாக்களும் நாடாளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த 10 மசோதா மீதான அறிக்கைகளும் மக்களவையில் விவாதிக்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

மாநிலங்களவை

மாநிலங்களவையைப் பொறுத்தவரை இந்திய மருத்துவக்குழு திருத்த மசோதா மீதான இணைக்குழுவின் அறிக்கை நிலுவையில் இருக்கிறது. மக்களவையில் நிறைவேற்றப்பட்ட 10 முக்கிய மசோதாக்கள் மாநிலங்களவையின் ஒப்புதலுக்காக காத்திருக்கின்றன.

நிலைக்குழுவுக்கு பரிந்துரைக்கப்படாமல் 3 மசோதாக்கள் கிடப்பில் உள்ளன, மக்களவையில் நிறைவேற்றப்பட்டு, நிலைக்குழுவுக்கு ஒரு மசோதா பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்ட ஒரு மசோதா மீதான அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்ட 21 மசோதாக்கள் மீதான ஆய்வு முடிக்கப்பட்டு மாநிலங்களவையில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இத்தனை மசோதாக்களை கிடப்பில் போட்டுவிட்டு தொடர் போராட்டம், அவை முடக்கம் அமளி, கோஷம் என்று எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்களித்த மக்களை நினைத்துப்பார்த்தாவது, எம்.பி.க்கள் தங்களின் கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும். இல்லையெனில் அனைவரும் வெட்கித் தலைகுனியும் சம்பவங்கள் தொடர்கதையாகிவிடும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

38 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

18 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

21 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்