பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்: தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கருத்து கணிப்புகளில் பாஜக கூட்டணி 350-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது. மக்களவையில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் குஜராத்தின் சூரத் தொகுதியில் மட்டும் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதர 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

கடைசிக் கட்ட தேர்தல் நேற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து மாலை 6.30 மணிக்குப் பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் முன்னணி ஊடகங்கள் நடத்திய கருத்து கணிப்பு விவரங்கள் வருமாறு:

முன்னணி இந்தி நாளிதழான தைனிக் பாஸ்கர் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 281-350, இண்டியா கூட்டணி 145-201, இதர கட்சிகள் 33-49 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. ரிபப்ளிக் டிவி-பிமார்க் இணைந்து நடத்திய கருத்துகணிப்பில் பாஜக கூட்டணிக்கு 359, இண்டியா கூட்டணி 154, இதர கட்சிகளுக்கு 30 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, ரிபப்ளிக் பாரத் மேட்ரிஸ், ஜன் கி பாத், நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ் மற்றும் டி-டைனமிக்ஸ், இண்டியா டிவி-சிஎன்எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பிலும் பாஜக கூட்டணிக்கு 350-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், மேற்குவங்கம், பிஹார், டெல்லி, சத்தீஸ்கர், அசாம், ஆந்திரா, ஒடிசா, உத்தராகண்ட், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக பெரும்பான்மை தொகுதிகளைக் கைப்பற்றும் என்றும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென் மாநிலங்களில் பாஜக முதல் முறையாக கால் பதிக்கும் என்றும் கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மத்தியில் ஆட்சியமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியமைக்கும், பிரதமர் நரேந்திர மோடி 3-வது முறையாக பதவியேற்பார் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக நிலவரம்: தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணி பெருவாரியான இடங்களில் அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு. கள் தெரிவிக்கின்றன.

குறைந்தபட்சம் 26-ல் இருந்து அதிகபட்சம் முழுவதுமாக 39 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெல்லக்கூடும் என கருத்து கணிப்புகளில் தெரிவிக்கப்படுகிறது. பாஜக கூட்டணி அதிகபட்சமாக 7 தொகுதிகள் வரை வெல்லக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் நிறுவனம் அதிமுக கூட்டணிக்கு 9 தொகுதிகள் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

‘சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணிக்கு தோல்வி’ - மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள் வெளியான பிறகு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

மக்களவைத் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் மனதார வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக இந்திய பெண்கள், இளைஞர்கள் பெருமளவில் வாக்களித்ததை பாராட்டுகிறேன். பெரும்பான்மை மக்கள் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக வாக்களித்து உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படுவதற்காக அயராது பாடுபட்டோம். எங்களது சாதனைகளை பார்த்து மக்கள் எங்களுக்கு

ஆதரவாக வாக்களித்து உள்ளனர். பாஜக ஆட்சிக் காலத்தில் உலகின் 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது. பாஜகவின் அனைத்து திட்டங்களும் கடைநிலை மக்கள் வரை சென்றடைந்துள்ளது. ஆனால் சந்தர்ப்பவாத இண்டியா கூட்டணி மக்களின் மனங்களை வெல்ல தவறிவிட்டது.

மதம், சாதிய பிரிவினையை தூண்டிய அந்த கூட்டணி தோல்வி அடைந்திருக்கிறது. அதில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் கட்சிகள். வாரிசு அரசியலுக்கு மட்டுமே இண்டியா கூட்டணி முதலிடம் அளிக்கிறது. தேர்தல் பிரச்சாரத்தில் என்னை வசைபாடுவதை மட்டுமே அவர்கள் லட்சியமாக கொண்டிருந்தனர். இத்தகைய அரசியலை மக்கள் நிராகரித்து உள்ளனர். இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

12 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

23 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்