“பிரதமர் பதவிக்கு ராகுல்தான் எனது தேர்வு” - கார்கே பேட்டி

By செய்திப்பிரிவு

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது தேர்வு என்று காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதுதொடர்பாக தனியார் சேனல் ஒன்றுக்கு மல்லிகார்ஜுன கார்கே அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: இந்தத் தேர்தலில் இண்டியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை. பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திதான் எனது விருப்பமாக உள்ளது. இது எனது தனிப்பட்ட விருப்பம்.

ஏனெனில், நாட்டின் இளைஞர்கள் மத்தியில் ராகுல் மிகவும் பிரபலமானவர். நாட்டை அழகான எதிர்காலத்துக்குக் கூட்டிச் செல்லும் திறனும் அவருக்கு உண்டு. பிரியங்கா காந்தியும் வரும் நாட்களில் தேர்தலில் போட்டியிடுவார். காங்கிரஸுக்கு குறைந்தது 128 இடங்கள் கிடைக்கும். இந்தியா கூட்டணி மற்றும் பிற பாஜகவின் எதிர்ப்புக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும்.

பாரத் ஜோடோ யாத்திரையை நாடு முழுவதும் நடத்தி மக்கள் மனதில் பிரபலமாக இருக்கிறார் ராகுல் காந்தி. எனவேதான் அவரை பிரதமர் பதவியில் அமர்த்தலாம் என்று கூறுகிறேன். நாடு முழுவதும் நடைபயணமாகச் சென்று மக்களின் மனதைப் படித்திருக்கிறார் ராகுல் காந்தி. நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர் கூட்டத்துக்கும் பிரதிநிதியாக இருக்கிறார்.

பல மேடைகளில் பிரதமர் மோடியை எதிர்த்து ராகுல் காந்தி தைரியமாக பேசி வருகிறார். இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலரான பிரியங்கா காந்தி வதேரா போட்டியிட்டிருக்க வேண்டும். அவரை இந்த தேர்தலில் போட்டியிடுமாறு நான் கேட்டுக் கொண்டேன். ரேபரேலி தொகுதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்ற பேச்சுகூட அவரது குடும்பத்திலேயே இருந்தது.

ஆனால், ரேபரேலி தொகுதியில் தனது சகோதரரான ராகுல் காந்தியை நிறுத்துமாறு பிரியங்கா அறிவுறுத்தினார். அதன்படி அங்கு ராகுல் போட்டியிடுகிறார். இருப்பினும் அந்தத் தொகுதியில் அதிக நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பிரியங்கா. இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE