பிரச்சாரம் ஓய்ந்தது: 206 கூட்டங்களில் பங்கேற்ற பிரதமர் மோடி

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் 206 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

மக்களவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் கடந்த மார்ச் 16-ம் தேதி அறிவித்தது. முதல் கட்ட தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம்தேதி 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நடைபெற்றது. 2-ம் கட்டதேர்தல் ஏப்ரல் 26-ல் 13 மாநிலங்களில் 88 தொகுதிகளில் நடைபெற்றது. 3-ம் கட்ட தேர்தல் கடந்த 7-ம் தேதி 11 மாநிலங்களில் 94 தொகுதிகளில் நடைபெற்றது. 4-ம் கட்ட தேர்தல் கடந்த 13-ம் தேதி 10 மாநிலங்களில் 96 தொகுதிகளில் நடைபெற்றது. 5-ம் கட்ட தேர்தல் கடந்த 20-ம் தேதி 8 மாநிலங்களில் 49 தொகுதிகளில் நடைபெற்றது. 6-ம் கட்ட தேர்தல் கடந்த 25-ம் தேதி 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் நடைபெற்றது. 7-வது மற்றும் இறுதி கட்ட தேர்தல் 8 மாநிலங்களில் உள்ள 57 தொகுதிகளில் நாளை நடைபெறுகிறது. இதன் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.

7 முறை தமிழகம் வந்தார்: தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பே பிரதமர் மோடி தனது தேர்தல்பிரச்சாரத்தை தொடங்கி விட்டார்.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, அவர் தென்னிந்தியாவில் உள்ள 5 மாநிலங்களில் 3 நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் தமிழகம், கேரளா, ஆந்திர பிரதேசத்தில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்க வில்லை. அதனால் இங்குவெற்றி பெற பாஜக., இந்த முறை கூடுதல் கவனம் செலுத்தியது. கர்நாடகாவில் தனது பலத்தை தொடர்ந்து பராமரிக்கவும், தெலங்கானாவில் பலத்தை அதிகரிக்கவும் பாஜக வியூகம் வகுத்தது. பிரதமர் மோடி தமிழகத்துக்கு 7 முறை வந்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், பிரதமர் மோடி நாடு முழுவதும் 68 நாட்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால் இந்த தேர்தலில் அவரது தேர்தல் பிரச்சார நாட்கள் 76-ஆக அதிகரிக்கப்பட்டது. கடந்த தேர்தலில் 145 பொதுக் கூட்டங்களில் மட்டுமே பிரதமர் மோடி பங்கேற்றார். ஆனால் இந்த முறை பொதுக் கூட்டம், ஊர்வலம் என 206 பொது நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்று மக்களிடம் வாக்கு சேகரித்தார். கடைசியாக தனது சூறாவளி பிரச்சாரத்தை பஞ்சாப் மாநிலத்தின் ஹோசியார்பூரில் பிரதமர் மோடி நேற்று நிறைவு செய்தார்.

தேர்தல் பிரச்சார கூட்டங்களில் எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். பிரதமரின் பேச்சு வெறுப்புணர்வை தூண்டுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது சாதி, மத பேச்சுக்களை தவிர்க்க வேண்டும் என பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது.

தேர்தல் தொடங்கியதில் இருந்து இதுவரை 80 ஊடகங்களுக்கு சிறப்பு பேட்டி அளித்துள்ளார். நாள் ஒன்றுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட ஊடகங்கள் பிரதமரிடம் பேட்டி எடுத்துள்ளன. தனது 73-வது வயதில் பிரதமர் மோடி ஓய்வின்றி 206 தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கலந்துகொண்டது மட்டும் அல்லாமல் ஊடகங்களுக்கும் நீண்ட பேட்டியை அளித்துள்ளார். இதற்கு முன் எந்த தலைவரும் இந்த அளவுக்கு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டதில்லை.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE