முல்லை பெரியாறில் புதிய அணை கட்டும் விவகாரம்: மத்திய அரசின் ஆலோசனை கூட்டம் ரத்து

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவது தொடர்பான விவகாரத்தில் நேற்று முன்தினம் நடக்க இருந்த ஆலோசனை கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், எந்த காரணமும் கூறாமல் திடீரென ரத்து செய்துவிட்டது.

ஆங்கிலேயர் ஆட்சியில் கடந்த 1893-ம்ஆண்டு முல்லை பெரியாறு அணை கட்டப்பட்டது. கேரள எல்லை பகுதியான இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த அணையை தமிழக பொதுப்பணி துறை பராமரித்து வருகிறது. பழமையான இந்த அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரளா நீண்ட காலமாக கோரி வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்குதொடரப்பட்டது. அணை வலுவாக இருப்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று கடந்த 2014-ல் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து கேரள அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு கடந்த 2011-ல் தள்ளுபடி செய்யப்பட்டது. இதே விவகாரம் தொடர்பாக கடந்த 2022-ல்உச்ச நீதிமன்றத்தில் கேரள அரசு மறுசீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த நிலையில், புதிய அணை கட்டுவதற்காக கேரள அரசு தற்போது புதிதாக திட்ட அறிக்கை தயார் செய்துள்ளது. இதுதொடர்பாக சுற்றுச்சூழல் ஆய்வுமேற்கொள்ளுமாறு மத்திய அரசிடம் கேரள அரசு சமீபத்தில் கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல்,வனம், காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் செயல்படும் நிபுணர் மதிப்பீட்டு குழு மே 28-ம் தேதி ஆய்வு செய்யும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கு தமிழக அரசு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இதுதொடர்பாக மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சர் பூபேந்திர யாதவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதமும் எழுதினார். ‘கேரள அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. இதில் உச்ச நீதிமன்ற உத்தரவுகள் பின்பற்றப்படாவிட்டால், வலுவான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்’ என்று அதில் கூறியிருந்தார்.

இந்நிலையில், முல்லை பெரியாறு அணை தொடர்பாக நேற்று முன்தினம் நடக்க இருந்த ஆலோசனை கூட்டத்தை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் எந்தகாரணமும் தெரிவிக்காமல் ரத்து செய்துள்ளது. தமிழக அரசின் எதிர்ப்பால் இக்கூட்டம் தள்ளிவைக்கப்பட்டதாக கேரள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

‘புதிதாக வரும் அரசு முடிவு எடுக்கும்’ - இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சக நிபுணர் மதிப்பீட்டு குழு வட்டாரங்கள் கூறியதாவது:

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அளிக்கும் ஆவணங்கள், திட்ட அறிக்கைகளை மட்டுமே நாங்கள் ஆய்வு செய்வோம். மே 28-ம் தேதி முல்லை பெரியாறுபுதிய அணை குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டது. திடீரென கூட்டம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக எங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை நடத்துவது, ரத்து செய்வது ஆகியவை அமைச்சகத்தின் முடிவு. இதில் எங்கள் பங்கு எதுவும் இல்லை. ஜூன் 4-ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அமையும் புதிய அரசு, இக்கூட்டத்தை நடத்துவது குறித்து முடிவு எடுக்கக்கூடும். இவ்வாறுஅந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE