ரீமல் புயல் பாதிப்பு: வடகிழக்கில் கனமழை, நிலச்சரிவில் 31 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

ஐஸ்வால்: மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய ரீமல் புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது.

தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் இன்று (மே 28) காலை பாறைகள் சரிந்து விழுந்தன. இத்துடன் சேர்த்து மாநிலத்தில் மொத்தம் நான்கு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் இறப்பு எண்ணிக்கை 30க்கும் அதிகமாக உயரக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதே போல அசாம் மாநிலத்தில் ரீமல் புயலால் பாதிக்கப்பட்ட கம்ரூப் மற்றும் மோரிகான் மாவட்டங்களில் மூன்று பேர் கனமழையில் சிக்கி உயிரிழந்துள்ளனர். மேகாலயா மாநிலத்தில் கிழக்கு ஜைந்தியா மலைப் பகுதிகளில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்கண்ட மூன்று மாநிலங்களிலும் கனமழையுடன் சுமார் 60 கி.மீ வேகத்தில் காற்று வீசியதில் மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால் பல இடங்களில் மின்சாரம் மற்றும் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது.

மிசோரம் கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானவர்களில் நான்கு வயது சிறுவனும், ஆறு வயது சிறுமியும் அடங்குவர். மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மிசோரம் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாறைகள் சரிந்து விழுந்தது உள்ளிட்ட மழையால் ஏற்பட்ட பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். அதோடு, கல் குவாரி இடிந்து இறந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை அவர் வழங்கினார். மீத தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீமல் புயல் மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் கீழே சரிந்ததை அடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE