மிசோரம் கனமழை: கல்குவாரி பாறைகள் சரிந்து பலியானோர் எண்ணிக்கை 17 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஐஸ்வால்: மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும், அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் கிழக்குப் பகுதியில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய ரீமல் புயல், மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் கடற்கரைகளுக்கு இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரையைக் கடந்தது. இந்நிலையில், தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக மிசோரம் மாநிலம் ஐஸ்வால் மாவட்டத்தில் கல்குவாரி ஒன்றில் இன்று( மே 28) காலை பாறைகள் சரிந்து விழுந்தன. இதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாகவும், 6 பேர் இடிபாடுகளில் சிக்கி இருப்பதாகவும் மிசோரம் மாநில டிஜிபி அனில் சுக்லா தெரிவித்துள்ளார்.

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "ரீமல் புயல் கரையை கடந்ததை அடுத்து பெய்த இடைவிடாத மழை காரணமாக மே 28 காலை, ஐஸ்வால் மாவட்டத்தில் ஒரு கல் குவாரியில் பாறைகள் இடிந்து விழுந்தன. ஐஸ்வால் நகரின் தெற்கு புறநகரில் உள்ள மெல்தும் மற்றும் ஹ்லிமென் இடையேயான பகுதியில் இன்று காலை 6 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இதில், 17 பேர் இறந்தனர். 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உள்ளனர்.

கனமழை காரணமாக பேரிடர் நிகழ்ந்த இடத்தில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கல் குவாரியில் பாறைகள் சரிந்ததில் பலியானவர்களில் நான்கு வயது சிறுவனும், ஆறு வயது சிறுமியும் அடங்குவர். இரண்டு நபர்களை நாங்கள் உயிருடன் மீட்டுள்ளோம்.

தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில், இரண்டு பேர் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மற்றொரு இடத்தில், ஒரு கட்டிடம் நிலச்சரிவில் அடித்துச் செல்லப்பட்டது. அதில், மூன்று பேர் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது

தேசிய நெடுஞ்சாலை 6ல் நிலச்சரிவு ஏற்பட்டதால், மாநிலத்தின் தலைநகரம் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலைகளும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளன" என மிசோரம் மாநில டிஜிபி அனில் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதனிடையே, இந்த சம்பவங்களை அடுத்து, உள்துறை அமைச்சர் கே. சப்தங்கா, தலைமைச் செயலாளர் ரேணு ஷர்மா மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் முதல்வர் லால்துஹோமா அவசர ஆலோசனை நடத்தினார். மழை காரணமாக, அனைத்து பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் தவிர மற்றவர்கள், வீட்டிலிருந்து வேலை செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

பாறைகள் சரிந்து விழுந்தது உள்ளிட்ட மழையால் ஏற்பட்ட பேரிடர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் லால்துஹோமா அறிவித்துள்ளார். அதோடு, கல் குவாரி இடிந்து இறந்த 8 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சத்துக்கான காசோலைகளை அவர் வழங்கினார். மீத தொகை விரைவில் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரீமல் புயல் மேற்கு வங்கத்தில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. பல்வேறு இடங்களில் மீன் கம்பங்கள் கீழே சரிந்ததை அடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெரும்பாலான இடங்களில் மரங்கள் வேரோடு சரிந்துள்ளதால் அவற்றை அப்புறப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். புயல் தாக்குவதற்கு முன்பாக மேற்கு வங்கத்தில் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதனிடையே, அடுத்த இரண்டு நாட்களுக்கு அசாம் மற்றும் பிற வடகிழக்கு மாநிலங்களில் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

15 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

6 hours ago

இந்தியா

8 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

இந்தியா

11 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

21 hours ago

மேலும்