ராணுவ தளபதி பதவி காலம் ஒரு மாதம் நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 2022-ம் ஆண்டு ஏப்ரல்30-ம் தேதி ராணுவத்தின் தலைமைதளபதியாக மனோஜ் பாண்டே பதவியேற்றார். அவரது பதவிக்காலம் மே 31-ம் தேதி நிறைவடைகிறது. தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் புதியஅரசு பதவியேற்ற பிறகு ராணுவத்தின் புதிய தலைமை தளபதி நியமிக்கப்படுவார்.

இதை கருத்தில் கொண்டு ராணுவ தலைமை தளபதி மனோஜ்பாண்டேவின் பதவிக் காலம் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி வரும் ஜூன் 30-ம் தேதி அவர் ஓய்வு பெறுவார். இதற்கான உத்தரவை மத்திய பாதுகாப்புத் துறை வெளியிட்டு உள்ளது.

ராணுவ நடைமுறைகளின்படி மூத்த தளபதி ஒருவர், புதிய தலைமை தளபதியாக நியமிக்கப்படுவது வழக்கம். மத்தியில் புதிய அரசு பதவியேற்ற பிறகு புதிய தளபதி யார் என்பது முடிவு செய்யப்படும். பணிமூப்பு மட்டுமன்றி, பணித் திறமையையும் மதிப்பீடு செய்தே புதிய தலைமை தளபதி நியமனம் செய்யப்படுவார் என்று மத்திய பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE