சிறையிலிருந்தபடி சொகுசு கார் விற்பனை: உ.பி. அரசு விசாரணைக்கு உத்தரவு

By ஆர்.ஷபிமுன்னா

புதுடெல்லி: உத்தரப்பிரதேச சிறையிலிருந்தபடி ஒரு குற்றவாளி தனது சொகுசு காரை விற்பனை செய்துள்ளார். இந்த சட்டவிரோத சம்பவத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்தச் சம்பவம், முதல்வர் யோகியின் சொந்த மாவட்டத்தில் நடைபெற்றுள்ளது.

கோரக்பூரில் விகாஸ் யாதவ் எனும் பிரபல குற்றவாளி காவல்துறையினரால் கடந்த அக்டோபரில் கைது செய்யப்பட்டிருந்தார். இவர் மீது, பல்வேறு மோசடி மற்றும் பணப்பறிப்பு வழக்குகள் பதிவாகி இருந்தன.

கோரக்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள விகாஸ் மீதான வழக்குகள் அம்மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறுகின்றன. இச்சூழலில், கைதி விகாஸ் சிறையிலிருந்தபடி தனது சொத்துக்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வந்துள்ளார் இவர், தனது சொகுசு காரை பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்தபோது இது வெளியில் தெரிந்துள்ளது.

உ.பியில் ஒருவர் தனது காரை போக்குவரத்து வாகனங்களின் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் விற்பனை செய்ய முடியாது. எந்த வாகனங்களும் வாங்கவும் முடியாது. ஏனெனில், இதன் பரிவர்த்தனையில் வாகன அலுவலரிடம் கைப்பேசியில் வரும் ஓடிபியும் அளிக்க வேண்டி உள்ளது.

ஆனால், விகாஸ் யாதவ் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை காண எவரும் வரவில்லை. எனவே, இந்த வாகன விற்பனை சம்பவத்தில் கோரக்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வழக்குப் பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

கோரக்பூரின் சாயிபா இம்தியாஸ் என்பவர் உள்ளிட்ட ஆறு பேரிடம் ரூ.63 லட்சங்களை மிரட்டி பறித்ததாக புகார் உள்ளது. எனவே, விகாஸின் சொத்துக்களை உபி அரசு பறித்துவிடும் அச்சம் அவருக்கு இருந்துள்ளது.

இதன் காரணமாக விகாஸ், தனது வீட்டின் விலை உயர்ந்த பர்னிச்சர்கள் உள்ளிட்டப் பொருட்களை ஒன்றன்பின், ஒன்றாக விற்பனை செய்துள்ளார். இறுதியில் தனது காரையும் அவர் சிறையிலிருந்தபடியே விற்பனை செய்துள்ளார். இதேவகையில் விகாஸ், தம் பங்களாவையும் விற்க முயற்சித்த நிலையில் சிக்கியுள்ளார்.

உபியில் முதல்வராக யோகி அமர்ந்தது முதல் குற்றவாளிகளின் சட்டவிரோத கட்டிடங்கள் இடித்து தள்ளப்படுகின்றன. குற்றவாளிகளின் சொத்துகளும் ஏலம் விடப்பட்டு பாதிக்கப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படுவதும் தொடர்கிறது. இந்த நடவடிக்கையிலிருந்த தப்ப முயன்ற விகாஸ் விசாரணையில் சிக்கியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE