கரையைக் கடந்தது ரீமல் புயல்: மேற்கு வங்கம், அசாம், மேகாலயாவில் கனமழை வாய்ப்பு

By செய்திப்பிரிவு

கொல்கத்தா: வங்கக்கடலில் நிலவிய ரீமல் தீவிர புயல் மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகள் - வங்கதேசத்தின் கெப்புபாரா இடையே கரையைக் கடந்தது. புயல் கரையைக் கடந்திருந்தாலும் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் கனமழை தொடர்கிறது. மேற்கு வங்கம் மட்டும் அல்லாது அசாம், மேகலாயாவில் இன்று கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புயல் கரையைக் கடந்தபோது மணிக்கு 135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இதனால், மேற்கு வங்கத்தில் பலத்த பாதிப்பு ஏற்பட்டது. மரங்கள் முறிந்து விழந்தது, மின் கம்பங்கள் சாய்ந்தது, குடிசை வீடுகள் தரைமட்டமானது எனப் பல்வேறு சம்பவங்கள் மேற்கு வங்கத்தில் நடந்துள்ளன. பிபிர் பாகன் பகுதியில் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கொசாபா பகுதியில் புயல் காற்றில் தூக்கி வீசப்பட்ட குப்பைகளால் ஒருவர் காயமடைந்துள்ளார். புயலால் மேற்கு வங்கத்தின் தென் பகுதியில் குறிப்பாக கொல்கத்தாவில் ரயில், விமான, சாலைப் போக்குவரத்து என அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இன்றும் பரவலாக கன மழை பெய்து வருகிறது. கொல்கத்தாவில் பலத்த காற்று, மழைக்கு இடையே மாநகராட்சி, மின் வாரியத் துறை எனப் பலதுறைகளும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. முன்னதாக நேற்று மேற்கு வங்கத்தில் 1 லட்சம் பேர் பத்திரமான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். பல்வேறு நிவாரண முகாம்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சூழலில் இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அண்மை அறிக்கையில், ரீமல் புயல் வடக்கு - வடகிழக்குப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளார். பின்னர் மேலும் வடகிழக்கு நோக்கி நகர்ந்து முற்றிலுமாக வலுவிழக்கும் என்று தெரிவித்துள்ளது.

புயல் வலுவிழந்தாலும் அதன் தாக்கத்தால் அசாம் மாநிலத்தின் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அசாமின் 11 மாவட்டங்களில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் அசாம், வடகிழக்கு மாநிலங்களில் பரவலாக கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது. இன்று தெற்கு அசாம் மற்றும் மேகாலயாவில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE