மே.வ. அதிகம், உ.பி குறைவு: இரவு 7.45 வரை 59.6% வாக்குப்பதிவு @ 6-ம் கட்ட தேர்தல்

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 6-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், இரவு 7.45 மணி நிலவரப்படி 59.6% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக 77.99% வாக்குகள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 52.02% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன. இரவு 7.45 மணி வரையிலான வாக்குப்பதிவு நிலவரம்:

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அதன்படி, உத்தரப் பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

வாக்குப்பதிவு பரவலாக அமைதியாகவே நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மட்டும் ஒரு சில தொகுதிகளில் ஆங்காங்கே சில வன்முறைச் சம்பவங்கள் பதிவாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மத்திய அமைச்சர்கள் தர்மேந்திர பிரதான், இந்தர்ஜித் சிங், பாஜக எம்.பி. மேனகா காந்தி, சம்பித் பத்ரா, ஹரியாணா முன்னாள் முதல்வர் மனோகர் கட்டார், மனோஜ் திவாரி, மெஹபூபா முஃப்தி, கன்னய்யா குமார் உள்ளிட்டோர் இந்தத் தேர்தல் களத்தில் உள்ள முக்கிய பிரமுகர்களாவர்.

வரும் ஜூன் 1-ஆம் தேதி 7-வது மற்றும் கடைசிக் கட்டத் தேர்தல் 57 தொகுதிகளில் நடைபெறுகிறது. ஜூன் 4-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில் தேர்தல் ஆணையம் இன்று இதுவரை நடந்து முடிந்த 5 கட்ட மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்கு சதவீதத்தை வெளியிட்டுள்ளது. வாக்குசதவீத நிலவரம் வேட்பாளர்களும், மக்களும் எப்போதும் அறிந்து கொள்ளும்படி வெளிப்படையாகவே இருந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE