6-வது கட்ட மக்களவை தேர்தல்: டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களில் 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு

By செய்திப்பிரிவு

புதுடெல்லி: நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20 ஆகிய தேதிகளில் 5 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், 6-வது கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது.

அதன்படி, உத்தர பிரதேசத்தில் 14, ஹரியாணாவில் 10, மேற்கு வங்கத்தில் 8, பிஹாரில் 8, டெல்லியில் 7, ஒடிசாவில் 6, ஜார்க்கண்டில் 4, காஷ்மீரில் 1 தொகுதி என 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

முன்னாள் முதல்வர்கள் மனோகர் லால் கட்டார் (ஹரியாணா), மெகபூபா முப்தி (காஷ்மீர்), முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா காந்தி, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜ், தொழிலதிபர் நவீன் ஜிண்டால் உட்பட மொத்தம் 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 பேர் மூன்றாம் பாலினத்தவர் என 11.13 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். மொத்தம் 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 11.4 லட்சம் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுகின்றனர்.

மக்களவை தேர்தலோடு ஒடிசாவில் 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE