“பிரஜ்வல் வழக்கில் ஒத்துழைக்கவில்லை” - மத்திய அரசு மீது க‌ர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் புகார்

By இரா.வினோத்


பெங்களூரு: பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் மத்திய அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என க‌ர்நாடக உள்துறை அமைச்சர் ப‌ரமேஸ்வர் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச‌ வீடியோக்கள் கடந்த 26-ம் தேதி வெளியானது. அவரது வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பேர் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை புகார் அளித்தனர்.

இதுதொடர்பாக சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார், அவர் மீது 4 வழக்குகளை பதிவு செய்தனர். மேலும் அவருக்கு 2 முறைலுக் அவுட் நோட்டீஸும், ப்ளூ கார்னர் நோட்டீஸும் விடுத்துள்ளனர். ஆனாலும் அவரை கைது செய்ய முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வர் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்படும் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதில் கர்நாடக அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீஸார் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 4 முக்கிய குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். ஆனால் பிரஜ்வல் ரேவண்ணாவை மட்டும் கைது செய்ய முடியவில்லை.

அதற்கு காரணம் அவர் இந்தியாவில் இல்லை என்பதுதான். அவர் தூதரக பாஸ்போர்ட் வைத்திருப்பதால் வெளிநாட்டுக்கு விசா இல்லாமலே தப்பிவிட்டார். அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். இதுதொடராக கர்நாடக அரசின் சார்பில் மீண்டும் மத்திய வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளோம்.

மத்திய அரசு, பிரஜ்வல் ரேவண்ணாவின் பாஸ்போர்ட்டை ரத்து செய்தால், அவர் நாடு திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஆனால் மத்திய அரசு இதுவரை பாஸ்போர்ட் விவகாரத்தில் எந்த பதிலும் அளிக்கவில்லை.

சிறப்பு புலனாய்வுத் துறை நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட்டை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியபோதும், மத்திய வெளியுறவுத்துறை எந்த பதிலும் அளிக்கவில்லை. மத்திய அரசு ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்ய முடியும். இவ்வழக்கில் மத்திய அரசு எங்களுக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மத்திய அமைச்சர் பதில்: மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறும்போது, “கடந்த ஏப்ரல் 21-ம் தேதியே வீடியோக்கள் வெளியாகி விட்டன. கடந்த ஏப்ரல் 27-ம் தேதிதான் பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டுக்கு தப்பிச் செல்கிறார். இந்த 7 நாட்களில் கர்நாடக போலீஸார் அவரை கைது செய்யாதது ஏன்? அவர் மீது முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாதது ஏன்? தூதரக பாஸ்போர்டை முடக்க சில நடைமுறைகள் உள்ளன. இந்த விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க மத்திய அரசு தயாராக இருக்கிறது” என்றார்.

இதுகுறித்து தேவகவுடா நேற்று கூறும்போது, “பிரஜ்வல் உடனடியாக நாடு திரும்பி சரணடைய வேண்டும். இல்லாவிட்டால் எங்கள் கோபத்துக்கு ஆளாக நேரிடும்” என்றார்.

சித்தராமையா 2-வது முறையாக கடிதம்: பிரதமர் மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா 2-வது முறையாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ''பிரஜ்வல் ரேவண்ணா மீது புகார் எழுந்த சில மணித்துளிகளில் தூதரக பாஸ்போர்ட்டைக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியது வெட்கக்கேடானது. அவருக்கு எதிராக பாதிக்கப்பட்டோர் குரல் எழுப்பி வரும் நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது. எனவே மத்திய அரசு அவரது தூதரக‌ பாஸ்போர்ட்டை ரத்து செய்து, பொதுமக்களின் நலன் கருதி அவர் இந்தியா திரும்புவதை உறுதி செய்ய வேண்டும்" என கோரியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

9 hours ago

இந்தியா

13 hours ago

இந்தியா

14 hours ago

இந்தியா

15 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

17 hours ago

இந்தியா

19 hours ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

இந்தியா

1 day ago

மேலும்