புதுடெல்லி: மக்களவைத் தேர்தல் 2024-ல் பாஜக 300+ இடங்களைக் கைப்பற்றும் என்று தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் மீண்டும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
‘தி வயர்’ ஊடகத்துக்காக கரண் தாப்பருக்கு பிரசாந்த் கிஷோர் நேர்காணல் அளித்திருந்தார். அதில், "இதுவரை நடந்து முடிந்துள்ள தேர்தல்களில், பாஜகவுக்கு செல்வாக்கு அதிகம் உள்ள பகுதிகளில் கடந்த 2019 தேர்தலின்போது பதிவான வாக்கு சதவீதத்தைவிட குறைந்திருப்பதால் பாஜக ஏமாற்றமடைந்திருப்பதாகக் கூறப்படுவதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?" என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "வாக்குச் சதவீதம் குறைவதால் அல்லது அதிகரிப்பதால் அது ஆளும் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. இரண்டையும் தொடர்பு படுத்துவதற்கான தரவுகள் எதுவும் இல்லை.
வாக்குப்பதிவு குறைந்ததற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதிக வெயில்கூட ஒரு காரணமாக இருக்கலாம். பல பத்திரிகையாளர்கள் டெல்லியில் இருந்து கொண்டு நாடு தழுவிய அளவில் மக்களின் மன நிலை இதுதான் என கூறுகிறார்கள். வாக்குகள் குறைந்ததற்கும் தேர்தல் முடிவுகளுக்கும் தொடர்பு இல்லை" என்று தெரிவித்தார்.
வாக்குப்பதிவு குறைந்ததால் தேர்தல் முடிவை எண்ணி பாஜக கவலை கொண்டுள்ளதா என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "அப்படி இல்லை. அவர்கள் கவலை கொள்கிறார்கள் என நான் கூற மாட்டேன். பொதுவாக, மிகப் பெரிய கட்சி என்பதால் வாக்குப்பதிவு குறைந்தது அவர்களுக்கு சிறிய அளவில் வருத்தத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
» புனே கார் விபத்து: “மைனரை மேஜராக கருத செயல்முறை உள்ளது” - சிறுவனின் வழக்கறிஞர்
» ‘தன்னை கடவுள் அனுப்பியதாக கூறும் மோடி செய்தவை...’ - பட்டியலிட்டு ராகுல் காந்தி விமர்சனம்
வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் தொடர்பாக பேச தொடங்கினால், எப்படியும் பேசலாம். மோடி மிகப் பெரிய தலைவர்; இருந்தும் அவருக்கு மக்கள் அதிக அளவில் வாக்களிக்க முன்வரவில்லை என்றும் கூறலாம். எதிர்க்கட்சிகள் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை; அதுதான் காரணம் என்றும் கூறலாம். ஆனால், அதற்குள் நான் புக விரும்பவில்லை. எனது கருத்து இதுதான்... வாக்குப்பதிவையும் தேர்தல் முடிவையும் நேரடியாக தொடர்பு படுத்துவதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்று தெரிவித்தார்.
சொந்த நாட்டு மக்களை ஊடுருவல்காரர்கள் என பிரதமர் மோடி கூறியது இஸ்லாமியர்களுக்கு எதிரானது இல்லையா என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "2014, 2019 தேர்தல்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் இந்து - முஸ்லிம் விவகாரத்தை பாஜக எழுப்பி இருக்கிறது. இந்து - முஸ்லிம் விவகாரம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்-ன் முக்கிய ஆயுதங்களில் ஒன்று. 2019 தேர்தலின்போது புல்வாமா தாக்குதல் பெரிதாக பேசப்பட்டது" என கூறினார்.
இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும், மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்றும் மோடி கூறுவது, தேர்தல் முடிவு குறித்த அச்சம் இல்லையா என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "நான் அப்படிப் பார்க்கவில்லை. அவர்கள் தேர்தல் முடிவு குறித்து கவலை கொள்வதாக நான் நினைக்கவில்லை. இந்து - முஸ்லிம் விவகாரத்தை தேர்தலில் பேசுவது அவர்களின் வாடிக்கை" என தெரிவித்தார்.
"இமாச்சல பிரதேச சட்டமன்றத் தேர்தலின்போது, அந்த மாநிலத்தில் காங்கிரஸ் வேரோடு அறுக்கப்படும் என்று கூறினீர்கள். ஆனால் காங்கிரஸ் வென்றது. தற்போது பாஜக 300+ இடங்களில் வெற்றி பெறும் என கூறுகிறார்கள். உங்கள் கருத்தை எப்படி எடுத்துக்கொள்வது?" என்ற கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசாந்த் கிஷோர், "ஹரியாணா தேர்தல் தொடர்பாக நான் அப்படி தெரிவித்ததற்கான வீடியோ ஆதாரம் உங்களிடம் இருக்கிறதா? வீடியோ ஆதாரத்தைக் காட்டுங்கள். நான் அப்படி சொல்லி இருந்தால், நான் தற்போது செய்து வருவதை நிறுத்திக்கொள்கிறேன். இல்லாவிட்டால் நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டும்" என கூறினார்.
அதற்கு கரண் தாப்பர், நீங்கள் என்ன கூறினீர்களோ, அது எழுத்து வடிவில் செய்தியாகி இருக்கிறது என தெரிவித்தார். அதற்கு, "நான் கூறியதைத்தான் அவர்கள் எழுதினார்கள் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது. பத்திரிகைகளில் என்ன வந்திருக்கிறது என்பதை நான் ஏற்க மாட்டேன். நான் பேசியது குறித்த வீடியோ இருக்கிறதா? இருந்தால் அதை எனக்கு காட்டுங்கள்" என மீண்டும் மீண்டும் பிரசாந்த கிஷோர் தெரிவித்தார்.
மேலும், "இந்த தேர்தலில், பாஜக தேர்தலில் வசதியாக வெற்றி பெறும். 2019-ஆம் ஆண்டு போல அக்கட்சி 300 இடங்களைப் பெறும். 5-15 இடங்கள் கூடுதலாகக் கூட அவர்களுக்குக் கிடைக்கலாம். மறுபுறம், காங்கிரஸ் கட்சியால் 100 இடங்கள் கூட பெற முடியாது. வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களில் பாஜகவுக்கு சேதம் ஏற்படும் என்று தான் எதிர்பார்க்கவில்லை. வடக்கு மற்றும் மேற்கில் பாஜக எத்தனை இடங்களை இழந்தாலும் அவற்றை அது கிழக்கு மற்றும் தெற்கு மாநிலங்களில் இருந்து பெற்றுவிடும். வடக்கு மற்றும் மேற்கில் பாஜக 50 இடங்களை இழந்தாலும், கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள வெற்றிகளின் மூலம் அதை அக்கட்சி ஈடுசெய்யும்" என்று தெரிவித்தார்.
கரண் தாப்பரின் கேள்விக்கு பதில் அளிக்கும்போது இடையில் பிரசாந்த் கிஷோர் தண்ணீர் குடித்ததால், பிரசாந்த் கிஷோரை கரண் தாபர் தண்ணர் குடிக்க வைத்துவிட்டதாக சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்துள்ள பிரசாந்த் கிஷோர், "தண்ணீர் குடிப்பது நல்லது. ஏனெனில் இது மனதையும் உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இந்தத் தேர்தலின் முடிவைப் பற்றிய எனது மதிப்பீட்டைக் கண்டு திகைப்பவர்கள் ஜூன் 4-ஆம் தேதியன்று போதுமான அளவு தண்ணீரைக் கையில் வைத்திருக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
52 mins ago
இந்தியா
12 hours ago
இந்தியா
16 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
18 hours ago
இந்தியா
20 hours ago
இந்தியா
21 hours ago
இந்தியா
22 hours ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago
இந்தியா
1 day ago