ஜெகன் அரசின் ரூ.1,500 கோடி பாக்கியால் ஆந்திராவில் இலவச மருத்துவ காப்பீடு முடக்கம்: பொதுமக்கள் கடும் அவதி

By என்.மகேஷ்குமார்


அமராவதி: ஆந்திராவில் தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வந்த இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவைகள் நேற்று முதல் முடங்கின. ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் அரசுடன் நடந்த பேச்சு வார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனால், பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் முதன் முறையாக ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி முதல்வராக இருந்தபோது, ’ராஜீவ் ஆரோக்கிய ஸ்ரீ’ எனும் இலவச மருத்துவ காப்பீடு திட்டத்தை அமல்படுத்தினார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான ஏழை,நடுத்தர வர்க்க குடும்பத்தினர் இலவசமாக கார்ப்பரேட் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றனர்.

மேலும், 108 ஆம்புலன்ஸ் சேவையையும் ராஜசேகர ரெட்டியே தொடங்கி வைத்தார். இத்திட்டங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து, தற்போது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் இது ‘ஜெகனண்ணா மருத்துவ சேவை’ திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கரோனா கால கட்டங்களில் இத்திட்டம் பெரிதும் உதவிகரமாக இருந்தது. ஆனால், கடந்த ஓர்ஆண்டு காலமாக சில மருத்துவமனைகளில் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க மறுக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது ஆந்திராவில் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இடைக்கால முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி வகித்து வருகிறார். தற்போது அவர் தனது குடும்பத்துடன் தனி விமானத்தில் லண்டன் சென்றுள்ளார்.

ஜெகன் அரசு ரூ.1,500 கோடி வரை பாக்கி வைத்துள்ளதால் மருத்துவ சேவைகளை 22-ம் தேதி (நேற்று) முதல் தொடர இயலாது என தனியார் மருத்துவமனை சங்கத்தினர் அறிவித்தனர்.

இதனை தொடர்ந்து மருத்துவதுறை முதன்மை செயலாளர் தலைமையில் மருத்துவமனை சங்கத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்ததால், இனி இலவச மருத்துவ காப்பீட்டுசேவையை தொடர வாய்ப்பில்லைஎன தனியார் மருத்துவமனை சங்கத்தினர் அறிவித்து விட்டனர்.

இதனால் நேற்று முதல் ஆந்திரமாநிலம், முழுவதும் இலவச மருத்துவ காப்பீடு திட்ட சேவை முற்றிலுமாக முடங்கியது. இதனால் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். புதிய அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் வரை இதே நிலைதான் நீடிக்குமா என ஏழை மக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE